மார்ச் 2011 முதல் விதிக்கப்பட்டிருந்த குறித்த பணிப்புரைகளே, நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் அகதிக் கோரிக்கை அல்லது புகலிடப் கோரிக்கை விடுத்து, அதைப் பெற்றுக் கொண்டவர்கள், குறித்த அகதி/புகலிட அந்தஸ்தைக் கைவிட்டாலொழிய, அவர்களுக்கான கடவுச்சீட்டுகளை வழங்குவதிலிருந்து தவிர்க்குமாறு, குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பணிப்புரைகள், பிரஜைகளின் உரிமைகளின் மீறலாக அமைந்ததாகவும், கடினமான தருணங்களில் இலங்கையை விட்டு வெளியேறியிருந்த இலங்கையர்கள் பலருக்கு, இலங்கையின் பயண ஆவணமொன்றை வழங்குவதைக் கடினப்படுத்தியதாகவும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுத் தெரிவித்தது. கடவுச்சீட்டொன்றை வைத்து, சுதந்திரமாக நடமாடவும், அவர்களது அரசியல் நம்பிக்கை எதுவாகவிருந்தாலும், பயணஞ்செய்வதற்குமான இலங்கைப் பிரஜைகள் அனைவரினது உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், இலங்கை முன்நிற்பதாக, அவ்வமைச்சின் அறிவித்தல் மேலும் தெரிவித்தது.