வெளிவாரி பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகள் நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வெளிவாரி பட்டதாரிகள் இன்று (வியாழக்கிழமை) இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது பட்டதாரிகள் நியமனத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவில்லை என வெளிவாரி பட்டதாரிகள் தெரிவித்திருந்தனர். அவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனங்களில் உள்வாரி பட்டதாரிகளுக்கு மட்டும் நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டது. எனினும் வெளிவாரி மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்பிளோமாதாரிகள் நியமனங்கள் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடி இன்றி அனைத்து பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாதாரிகள் அனைவருக்கும் நியமனங்கள் உடனடியாக வழங்கப்படவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த விடயம் தொடர்பான தொடர் நடவடிக்கைகளை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள்” என்றும் தெரிவித்தார்.