மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை ஆயிரத்து 877 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 5 ஆயிரத்து 500 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 161 வீடுகள் முழுமையாகவும் 367 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 548 வீடுகள் முழுமையாகவும் ஆயி-ரத்து 333 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 412 வீடுகள் முழுமையாகவும் 1122 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 346 வீடுகள் முழுமையாகவும் 402 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவில் 305 வீடுகள் முழுமையாகவும் 950 வீடுகள் பகுதியள-விலும் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. காத்தான்குடி பிரதேச செயலளார் பிரிவில் 11 வீடுகள் முழுமையாகவும் ஆயிரத்து 239 வீடுகள் பகுதியளவிலும் சேதமைந்துள்ளன. ஆரையம்பதி பிரதேச செயலளார் பிரிவில் 1 வீடு முழுமையாக சேதமைந்துள்ளது.மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 10 வீடுகள் முழுமையாகவும் 54 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மண்முனை தென் கிழக்கு பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 24 வீடுகள் முழுமையாகவும பகுதியளவிலும் சேதமடைந் துள்ளன என மாவட்ட அனர்த்த முகாமைத் துவ நிலையம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ளன. இவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளை கேட்டறிந்துள்ளார். இவர்களுக்கான நிவாரண உதவிகள் கிடைப்பதற்கும் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
கிளிநொச்சியில் பெருங்குளங்களின் வான்பாயும் பரப்புக்களை அண்டியுள்ள குடும்பங்களும், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் குடும்பங்களும், சீரற்ற வீட்டுவசதிகளை கொண்டுள்ள குடும்பங்களுமென சமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ளனர்.
இதற்கமைய கிளிநொச்சி பன்னங்கண்டி இந்து தமிழ்க் கலவன் வித்தியாலத்தில் 48 குடும்பங்களை சேர்ந்த 103 பேரும், கிளிநொச்சி பரந்தன் புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் 34 குடும்பங்களை சேர்ந்த 108 பேரும், கிளி புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் அ.த.க.பாடசாலையில் 124 குடும்பங்களை சேர்ந்த 446 பேரும், கிளி கலவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயத்தில் 84 குடும்பங்களை சேர்ந்த 191 பேரும், கிளி தர்மபுரம் நெசவு நிலையத்தில் 31 குடும்பங்களை சேர்ந்த 103 பேரும், கிளி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 139 பேரும் தங்கியுள்ளனர்.
இதேபோல் கிளிநெச்சி முரசுமோட்டை அ.த.க.பாடசாலையில் 20 குடும்பங்களை சேர்ந்த 75 பேரும், பரந்தன் சிவபுரம் இராகுலன் முள்பள்ளியில் 46 குடும்பங்களை சேர்ந்த 122 பேரும், கிளி கண்டாவளை மகா வித்தியாலயத்தில் 92 குடும்பங்களை சேர்ந்த 280 பேரும் உமையாள்புரம் பொதுநோக்கு மண்டபத்தில் 18 குடும்பங்களை சேர்ந்த 42 பேரும் தங்கியுள்ளனர்.
மேலும் கனகராயன் ஆற்று ஓரங்களில் வசிக்கும் குடும்பங்கள் இடப்பெயர்வை சந்தித்துள்ளனர். அத்துடன் ஆனைவிழுந்தான், அக்கராயன், முட்கொம்பன், ஸ்கந்தபுரம் கண்ணகைபுரம், பொன்னகர், கனகாம்பிகைகுளம் உள்ளிட்ட கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதால் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேசசபையின் உப தவிசாளர் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர் தவபாலன், கட்சிச்செயற்பாட்டாளர் ராசன் உட்பட கட்சி செயற்பாட்டாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.