விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 49 நாள் சுற்றுப்பயணமாக வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ளது. அங்கு 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் ஆடுகிறது.
இதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி ஆட்டம் பாசெட்ரே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கும், அங்குள்ள சூழலுக்கும் தங்களை தயார்படுத்திக்கொள்ள பயிற்சி களம் அருமையான வாய்ப்பாகும். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நீண்ட நேரம் பந்து வீசும் நிலைக்கு வந்து விட்டாரா? என்பதை சோதித்து பார்க்க பயிற்சியாளர் அனில் கும்பிளே ஆர்வமாக உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவன் அணியில் இடம் பெற்றுள்ள கேப்டன் லியோன் ஜான்சன், ஜெர்மைன் பிளாக்வுட், ராஜேந்திர சந்திரிகா, ஷேன் டாவ்ரிச், ஷாய் ஹோப், ஜோமல் வாரிகன் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் ஆடிய அனுபவம் பெற்றவர்கள்.
இதனால் பயிற்சி ஆட்டமும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேன்கள் பொறுமையாக நிலைத்து நின்று ஆட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் 75 முதல் 80 பந்துகள் தாக்குப்பிடித்து ஆட வேண்டும் என்று பயிற்சியாளர் அறிவுறுத்துவார் என்று தெரிகிறது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தான் கடும் நெருக்கடியில் இருக்கிறார். அவர் திறமையை காட்ட தவறினால், இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் அவரது இடத்தை தட்டிப்பறித்து விடுவார். இந்த பயிற்சி ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றதும் இந்திய வீரர்கள் ஜாலியாக பீச் வாலிபால் ஆடினார்கள். யோகா பயிற்சியும் மேற்கொண்டனர். தொடர்ந்து பயிற்சியிலும் ஈடுபட்டனர்.