2-வது டெஸ்ட் கிரிக்கெட்
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 52.3 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிளாக்வுட் 62 ரன்னும், சாமுவேல்ஸ் 37 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டும், அமித் மிஸ்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
லோகேஷ் ராகுல்
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 75 ரன்களுடனும், புஜாரா 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து ஆடிய லோகேஷ் ராகுலும், புஜாராவும் நிதானமாக ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 208 ரன்னை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. புஜாரா (46 ரன்) ரன்-அவுட் ஆகி வெளியேறினார். 3-வது சதம் அடித்த லோகேஷ் ராகுல் 303 பந்துகளில் 15 பவுண்டரி, 3 சிக்சருடன் 158 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் வெளிநாட்டில் முதல் 3 டெஸ்ட் சதங்களை அடித்த 3-வது இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையை லோகேஷ் ராகுல் பெற்றார். இதற்கு முன்பு இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் கவாஸ்கர் முதல் 8 சதத்தையும், வினோ மன்கட் முதல் 3 சதத்தையும் அன்னிய மண்ணில் அடித்து இருந்தனர். விராட்கோலி 44 ரன்னிலும், அஸ்வின் 3 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இந்திய அணி ரன் குவிப்பு
2-வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்து இருந்தது. ரஹானே 42 ரன்னுடனும், விருத்திமான் சஹா 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ரஹானே, விருத்திமான் சஹா ஆகியோர் தொடர்ந்து விளையாடினார்கள். இருவரும் தடுப்பு ஆட்டத்திலேயே அதிக கவனம் செலுத்தினார்கள். 151.4 ஓவர்களில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் குவித்தது. விருத்திமான் சஹா 47 ரன் எடுத்த நிலையில் ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அத்துடன் மதிய உணவு இடைவேளை எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ரஹானே 74 ரன்னுடன் களத்தில் இருந்தார்.