சுமார் 130 இலங்கை இராணுவத்தினர் மீது இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவலை ஏ.எவ்.பி. செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.இலங்கையில் நடைபெற்ற இறுதிப் ேபாரின்போது, பாதுகாப்புத் தரப்பினர் பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கள் பலமாக எழுந்திருந்தபோதும், அதனை இலங்கை அரசு நிராகரித்திருந்தது.
இலங்கைப் பாதுகாப்புப் படையினர் ஒழுக்கமானவர்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே அமைதி காக்கச் சென்ற இலங்கைப் படையினருக்கு எதிராக மேற்படி குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டிலும் ஹெய்ட்டியில் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினர் மீது பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க ப்பட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் அதே குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டுள்ளது. ‘ஹெய்ட்டியில் பணியாற்றிய 130 இலங்கை இராணுவத்தினர் அங்குள்ள சிறுவர்களை துர்நடத்தைக்கு உள்ளாக்கியுள்ளனர். 12 வயதுடைய சிறுமிகள் மற்றும் சிறுவர்களுடன் இலங்கைப் படையினர் பாலியல் உறவு கொண்டுள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, விசாரணையாளர்களிடம் வழங்கிய தகவலில் சுமார் 50 அமைதிப் படையினர் தம்முடன் உறவு கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தளபதி 75 சதங்களைத் தமக்கு வழங்கினார் என்றும் சிலவேளைகளில் தாம் இராணுவ கனரக வாகனத்தில் உறங்கியதாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைதி காப்புப் படையினர் எவரும் தண்டிக்கப்படவில்லை. பதிலுக்குக் குற்றம் சுமத்தப்பட்ட 130 பேரில், 114 பேர் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்’ என்று ஏ.எவ்.பி. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்னவிடம் வினவியபோது, குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த இராணுவத்தினரை இராணுவக் கட்டளைத் தளபதி சேவையிலிருந்து நீக்கியுள்ளார். பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கு இலக்கான அனைத்துத் துருப்பினர்கள் தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது – என்றார்.
ஐ.நா. அமைதிப் படையில் உள்வாங்கப்படும் இலங்கைப் படையினர் மீது போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்து இணைத்துக் கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன், கடந்த 34 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இலங்கைப் படையினர் மீது எழுந்துள்ள நிலையிலும், 700 படையினர் மாலியில் அமைதி காக்கும் ஐ.நா. படையுடன் அண்மையில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.