இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிந்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு விராட் கோலியின் பேட்டிங் முக்கிய பங்கு வகித்தது. அவர் முதல் இன்னிங்சில் 167 ரன்னும், 2-வது இன்னிங்சில் 81 ரன்களும் குவித்தார். இரண்டிலும் சேர்த்து 248 ரன்கள் குவித்ததால் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இதன்மூலம் டெஸ்ட் தரவரிசையில் உச்சத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியின் மூலம் 97 புள்ளிகள் பெற்று 822 புள்ளிகளுடன் 14-வது இடத்தில் இருந்து 10 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளார் கோலி. தற்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 897 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 844 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 838 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
தற்போது முதல் நான்கு இடத்தையும் பிடித்துள்ள இவர்கள் இந்த கால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்கள் என்று கருதப்பட்டு வருகிறார்கள். விராட் கோலி டி20 பேட்ஸ்மேன் வரிசையில் முதல் இடத்திலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் 2-வது இடத்திலும் உள்ளார்.