ஒரு நாள் பயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அணி, டக்வேர்த் லூயிஸ் விதிப்படி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கு முன்னதாக பயிற்சி போட்டி மொரட்டுவையில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கை தலைவர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் பிரியஞ்சன் 65 ஓட்டங்களையும், விதானகே 56 ஓட்டங்களையும், திஸர பெரேரா 52 ஓட்டங்களையும், குணதிலக்க 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில், மொஹமட் ஹபீஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 326 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 46.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. முன்னதாக போட்டியின் போது மழை குறுக்கிட பாகிஸ்தான் அணிக்கு 46.2 ஓவர்களில் 304 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் அணியினால் 290 ஓட்டங்களையே பெற முடிந்ததால் இலங்கை தலைவர் அணி 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தான் தரப்பில், துடுப்பாட்டத்தில் மொஹமட் ஹபீஸ் 54 ஓட்டங்களையும், அமேட் ஷெஷாட் 39 ஓட்டங்களையும், மிஸ்பா உல் ஹக் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் திஸர பெரேரா, சமீர, ரன்டீவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.