ஐதராபாத் அணிக்கு எதிராக 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு மோசமான பந்துவீச்சே காரணம் என்று விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். 9–வது ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி 15 ரன்னில் ஐதராபாத்திடம் வீழ்ந்து 4–வது தோல்வியை தழுவியது.
ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. கேப்டனும், தொடக்க வீரருமான டேவிட் வார்னர் 50 பந்தில் 92 ரன்னும் (9 பவுண்டரி, 5 சிக்சர்), வில்லியம்சன் 38 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி), ஹென்ரிக்ஸ் 14 பந்தில் 31 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ரிச்சர்ட்ஸ் 2 விக்கெட்டும், வாட்சன், சம்சி தலா 1 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது. இதனால் ஐதராபாத் 15 ரன்னில் வெற்றி பெற்றது. ராகுல் 28 பந்தில் 51 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), டிவில்லியர்ஸ் 32 பந்தில் 47 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நெக்ரா, பரீந்தர் ஸ்ரன், புவனேஸ்வர் குமார், முஸ்டாபிசுர் ரகுமான், ஹென்டரிக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.பெங்களூர் அணி 4–வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
தவான் தொடக்கத்திலேயே ஆட்டம் இழந்தாலும் ஐதராபாத் அதில் இருந்து எளிதில் மீன்டது. வார்னரின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. வில்லியம்சன் அவருக்கு உறுதுணை அளித்தார். எங்களது பந்துவீச்சு திட்டம் மீண்டும் எடுபடவில்லை. எங்களது பந்துவீச்சு மோசமான இருந்தது. வார்னர் அவுட் ஆனதை தொடர்ந்து 175 ரன்னுக்குள் ஐதராபாத்தை கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் 195 ரன் இலக்காகிவிட்டது. மிகவும் அதிகமான ஸ்கோர் தான்.நான் பேட்டிங்கை பற்றி கவலைப்படவில்லை.
எங்களது பந்துவீச்சில் தான் முன்னேற்றம் தேவை. இந்த தோல்விக்கு மோசமான பவுலிங்கே காரணமாகும். இனிவரும் போட்டிகளில் பந்துவீச்சு சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன். பெங்களூர் அணி 7–வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை நாளை சந்திக்கிறது.ஐதராபாத் அணி 5–வது வெற்றியை பெற்றது. அந்த அணி 8–வது போட்டியில் குஜராத் லயன்சை 6–ம் திகதி சந்திக்கிறது.