புதிய தேர்தல் முறைமை சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாதிப்பாகவே அமையும். இது ஒருபோதும், சிறுபான்மையினரின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை சரியாக வழங்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மாற்றியமைக்கப்பட்ட புதிய 20ஆவது திருத்தச் சட்ட யோசனை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிறுபான்மை மக்களின் பிரதிநித்துவம் பாதிக்கப்படாது என்ற உறுதிமொழி வழங்கப்படாமல், தற்போதுள்ள வடிவத்திலும் 20ஆவது திருத்தத்தை ஆதரிப்பது கஷ்டமான விடயம். ஆரம்பத்திலிருந்தே அரசிடம், தேர்தல் முறைமை மாற்றம் செய்யப்படும் பொழுது தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யக் கூடாதென்று கோரியிருந்தோம். அந்த எண்ணிக்கையில் குறைப்புச் செய்வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
போரின் காரணமாக வடக்கு – கிழக்கில் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர். பலர் புலம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் விகிதாசார பிரதிநிதித்துவத்திலேயே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 9இலிருந்து 7 ஆகக் குறைந்துள்ளது. தொகுதிவாரியாக பிரிக்கப்படும்பொழுது தமிழ் மக்களின் பிரதிநித்துவம் மேலும் குறைவடையக்கூடும். 15 வருடங்களுக்கு வடக்கு – கிழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்பதைத்தான் அரசிடம் வலியுறுத்தி வருகின்றோம்.
இந்தத் திருத்தங்களால் மலைய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படப்போகின்றது. அதற்கு என்ன ஏற்பாடு செய்யப் போகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இலக்கத்தில் மாற்றுவதால் மட்டும் பயன் ஏதுமில்லை. இலக்கத்தைக்கூட்டி, சிங்களப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் முயற்சிகளை ஏற்றுக் கொள்ளமுடியாது. சிறுபான்மை மக்களின் பிரதிநித்துவம் பாதிக்கப்படாது என்று அரசு வெளிப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் 20ஆவது திருத்தச் சட்டத்தை தற்போதுள்ள வடிவிலும் ஆதரிப்பது கஷ்டமானது என்றார்.