இந்தியாவுக்கு 9 முறை சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியால் ஒரு முறை கூட தொடரை கைப்பற்ற முடியவில்லை.
கடந்த 1997ல் இவ்விரு அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட தொடர் 1–1 என சமன் ஆனது. எட்டு முறை (1982–83, 1986–86, 1990–91,19 93–94, 2005–06, 2006–07,2009–10, 2014–15) இந்தியா தொடரை கைப்பற்றியது.
32 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட் வாஷ்
நேற்றைய கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், முதன்முறையாக 5–0 என இலங்கைக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியது.
முன்னதாக இரண்டு முறை, 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வந்த இலங்கை அணியை 1–4 (1986–87), 1–3 (2009–10) என இந்தியா வென்றது.
கடந்த 1982ல் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3–0 என முழுமையாக வென்றது.
தற்போது 32 ஆண்டுகளுக்கு பின், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றி உள்ளது.
இந்திய அணியின் சாதனை
நேற்று வென்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான சர்வதேச போட்டிகளில் 100வது வெற்றியை (83 ஒருநாள் போட்டி, 14 டெஸ்ட், 3- டி20) பதிவு செய்தது. கோஹ்லி அணித்தலைவராக 100 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளார்.
அசத்தல் அணித்தலைவர்கள்
இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்கள் வரிசையில், இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் முதலிடம் பிடித்தார்.
இவர், 5 போட்டியில் ஒரு சதம், 2 அரைச்சதம் உட்பட 339 ஓட்டங்கள் எடுத்தார். இவரை அடுத்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 5 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 329 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்த மூன்று இடங்களில் இந்தியாவின் ஷிகர் தவான் (283 ஓட்டங்கள்), ரோஹித் சர்மா (273), அம்பதி ராயுடு (250) ஆகியோர் உள்ளனர்.
மேத்யூஸூன் மிரட்டல் சிக்சர்
கடைசி போட்டியில் சிக்சர் மழை பொழிந்த இலங்கையின் மேத்யூஸ் (10 சிக்சர்), ஒருநாள் அரங்கில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த இலங்கை வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார்.
முதலிடத்தில், முன்னாள் அணித்தலைவர் ஜெயசூர்யா (11 சிக்சர், பாகிஸ்தானுக்கு எதிராக, 1996) உள்ளார்.
மேத்யூஸை வென்ற கோஹ்லியின் சதம்
கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் ஒரே மாதிரியாக 139 ஓட்டங்கள் எடுத்தது அபூர்வமான விடயம். இதில் கோஹ்லிக்கே வெற்றி வசமானது.
இரட்டை சத சாதனைகளில் இந்தியாவின் விசித்திர வெற்றி
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் சர்வதேச ஒருநாள் அரங்கில் முதல் இரட்டை (200 ஓட்டங்கள்) சதத்தை பதிவு செய்யும் போது இந்தியா 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 219 ஓட்டங்கள் எடுத்த போது இந்தியா அதே 153 ஓட்டங்கள் ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்து ரோஹித் சர்மா உலக சாதனை படைத்த போதும் அதே 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.