இந்நிலையில், 433 தமிழக மீனவர்கள் உள்பட 619 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு உதவியுடன் மீட்பு பணி முழுவீச்சில் நடைபெறுவதாக டெல்லியில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
‘புயலால் மாயமான அனைத்து மீனவர்கள் மீட்க வேண்டும் என தமிழக அரசு முழுவீச்சில் செயல்படுகிறது. கடலில் தற்போது சீரான நிலை ஏற்பட்டுள்ளதால் மாயமான மீனவர்கள் மீண்டும் திரும்புவார்கள் என நம்புகிறோம். புயலால் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்த ஆய்வு நடைபெறுகிறது. விரைவில் முழுமையான அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்’ என்றும் ஜெயக்குமார் கூறினார்.
புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.2,000 கோடியை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இதற்கிடையே ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.1843 கோடி வழங்கும்படி மத்திய அரசிடம் கேரள அரசு கேட்டுள்ளது.