எத்தனை முறை சொன்னாலும் திகட்டாதது காதல். அந்த காதலை ஒரு முழு படமாக எடுத்து நம்மை பரவசப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார். இயக்குனராக முதல் படம் போல தெரியவில்லை.
விஜய் சேதுபதி (ராம்) ஒரு டிராவல் போட்டோகிராபர். அழகாக செல்லும் அவர் வாழ்க்கையில், ஒருநாள் எதிர்பாராதவிதமாக தான் 10-ஆம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கு செல்கிறார். பள்ளிகால நண்பர்களுடன் பேசுகிறார்.
மீண்டும் சந்திக்க திட்டம் போடுகின்றனர். 96 ரீயூனியன் இணைகிறது. அங்கே விஜய் சேதுபதி பள்ளிகாலத்தில் காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்த திரிஷாவும் (ஜானு) வருகிறார்.
அந்த ஒரு நாள் இரவு விஜய் சேதுபதி – திரிஷா வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இருவரும் தங்களது காதலை எவ்வாறு நினைவுகூர்ந்தார்கள்? என ஒட்டுமொத்த படமும் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்பது தான் படத்தின் கதை.
ஒரு சின்ன தவறுதலில் காதல் மீண்டும் கைகூடாமல் போவதும், தன்னை வெறுத்த காதலியின் பின்னாலேயே அவருக்கு தெரியாமல் ஒளிந்துகொண்டு தொடர்வதும் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்க கூடிய தருணங்கள்.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் நமது வாழ்க்கையுடன் இணைக்கிறது. அதுதான் படத்தின் வெற்றி.
படத்தில் காதலை கூட்டுவது மகேந்திரன், சண்முகசுந்தரம் இருவரின் ஒளிப்பதிவுதான். ஒலிப்பதிவும் அதற்கு துணை நிற்கிறது. கோவிந்தின் இசை காதலை இசையால் சொல்கிறது. இசையால் காதலை கண்முன் நிறுத்தியிருக்கிறார். கோவிந்தராஜின் படத்தொகுப்பு கச்சிதம்.