அவுஸ்த்ரேலியா தொடரில் தடுமாறும் இந்தியா!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

இரண்டு மிட்செல் (ஜான்சன், ஸ்டார்க்) இல்லாத ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மூன்று போட்டிகளிலும் இந்தியா அதிக அளவு ரன் குவித்தும் தொடரை 0-3 என இழந்துள்ளது. இதற்கு சரியான ஆடும் லெவன் அணியை தேர்வு செய்தவதில் தோனி தடுமாறுவதும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. வழக்கமான பெர்த் பிட்ச்-ஆக இல்லாவிட்டாலும் சிறிய அளிவில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்தது. ஆஸ்திரேலியா ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் ஆகிய 6 பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது. ஐந்து வேகத்தை தாக்குப்பிடித்து இந்தியா 309 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 171 ரன்னும், கோலி 91 ரன்களும் சேர்த்தனர்.

ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் மட்டும் 10 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்தார். மற்றபடி பாரிஸ் 8 ஓவரில் 53 ரன்களும், மிட்செல் மார்ஷ் 9 ஓவரில் 53 ரன்னும், போலந்து 10 ஓவரில் 74 ரன்களும், பால்க்னெர் 10 ஓவரில் 60 ரன்களும் கொடுத்தனர். ஆனால், சுழற்பந்து வீச்சாளர் 3 ஓவரில் 22 ரன்கள் கொடுத்தார்.

பெர்த் ஆடுகளத்தில் இந்தியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புவனேஸ்வர் குமார், ஸ்ரன், உமேஷ் யாதவ் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன்தான் களம் இறங்கியது. டோனியின் முதல் தவறே இதுதான். பெர்த் ஆடுகளத்தில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன்தான் களம் இறங்கியிருக்க வேண்டும்.

ஸ்ரன் 9.2 ஓவரில் 56 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 9 ஓவரில் 42 ரன்களும், உமேஷ் யாதவ் 10 ஓவரில் 54 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

இந்த மூன்று பேரும் சேர்ந்து 28.2 ஓவர்களில் (170 பந்துகள்) 152 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். மூன்று பேரும் 18 ரன்களை சேமித்தனர். அஸ்வின் 9 ஓவர்களில் 68 ரன்களும், ஜடேஜா 9 ஓவர்களில் 61 ரன்களும், ரோகித் சர்மா ஒரு ஓவரில் 11 ரன்களும், விராட் கோலி 2 ஓவரில் 13 ரன்களும் கொடுத்தனர். இவர்கள் நான்கு பேரும் 21 ஓவர்களில் (126 பந்துகள்) 153 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். இவர்கள் 27 ரன்கள் அதிகம் கொடுத்ததால்தான் இந்த முடிவு. மேலும், புவனேஸ்வர் குமாருக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது. அதை நிறைவு செய்ய விட்டிருக்கலாம். டோனியின் தவறான பந்து வீச்சாளர்கள் தேர்வால் இந்தியா தோல்வியடைந்தது.

தோல்விக்குப்பின் டோனி பேட்டியளிக்கையில் சுழற்பந்து வீச்சாளர்கள் இதுபோன்று மோசமாக பந்து வீசியதை நான் இதுவரை பார்த்ததில்லை என்றார்.

பிரிஸ்பேனில் நடைபெற்ற 2-வது போட்டியில் புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு இசாந்த் சர்மா சேர்க்கப்பட்டார். இந்த போட்டியிலும் டோனி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன்தான் களம் இறஙகினார்.

இதிலும் இந்தியா 308 ரன்கள் குவித்து தோல்வியடைந்தது. அஸ்வின் 60 ரன்கள், ஜடேஜா 50 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினால் போட்டி இந்தியாவிற்கு சாதகமாக மாறியிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இந்த போட்டியில் தோல்வியடைந்த பிறகு டோனி கூறுகையில் பேட்ஸ்மேன்கள் கூடுதலாக ரன் சேர்க்க வேண்டும். இந்தியா 330-க்கு மேல் குவிக்க வேண்டும் என்றார். மேலும், இன்னொரு வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கினால் முன்னணி பேட்ஸ்மேனை இழந்து 6 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கவேண்டும் என்றார்.

இரண்டு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலேயே மூன்று வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கிய டோனி, மெதுவான (Slow) ஆடுகளமான மெல்போர்னில் இதே கூட்டணியுடன்தான் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் அஸ்வின் மற்றும் மணீஷ் பாண்டேவை நீக்கிவிட்டு குர்கீரத் சிங் மற்றும் ரிஷி தவானை அணியில் சேர்த்தார். மணிஷ் பாண்டேவை நீக்கிவிட்டு ரிஷி தவானை சேர்த்தது சரியென்றாலும் அஸ்வினை நீக்கியது மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது.

இந்த போட்டியிலும் இந்தியா 295 ரன்கள் குவித்தது. மெல்போர்னில் பகல்-இரவு ஆட்டத்தில் இவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸிங் செய்வது மிகக்கடினம். அப்படிதான் போட்டியும் சென்றது. ஆஸ்திரேலியா 38.1 ஓவரில் 215 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து விட்டது.

சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 10 ஓவர்களில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பந்து அதிக அளவில் சுழன்றது. ஆனால், ஜடேஜாவிற்கு எதிர்முனையில் பந்து வீச சரியான மாற்று சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் போனது. அஸ்வின் இருந்திருந்தால் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றிருக்கும். அஸ்வின் இல்லாவி்ட்டாலும் குர்கீரத் சிங்கிற்கு கூடுதல் ஓவர் கொடுத்திருக்கலாம். அவர் 5 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும்தான் கொடுத்திருந்தார். அதன்பின் அவரை டோனி பயன்படுத்தவில்லை.

அதேபோல் ரிஷி தவான் 6 ஓவரில் 33 ரன்கள் தான் கொடுத்திருந்தார். அதன்பின் அவருக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. ஸ்ரனுக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் 8 ஓவரில் 63 ரன்கள் வாரி வழங்கினார். இந்த போட்டியிலும் டோனியின் பந்து வீச்சாளர் தேர்வின் மூலம் தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று. அத்துடன் இந்தியா தொடரையும் 0-3 என இழக்க நேரிட்டது.

20-ந்தேதி கான்பெர்ராவில் நடைபெற இருக்கும் 4-வது போட்டியில் எப்படி களம் இறங்குவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அவுஸ்த்ரேலியாஇந்தியாதடுமாறும்தொடரில்
Comments (0)
Add Comment