ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் தொடங்குகிறது

ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் முதலில் வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வழக்கம் போல் ‘நீயா–நானா’ போட்டிக்கு பஞ்சமில்லை. இருப்பினும் உலகின் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா), விம்பிள்டன் சாம்பியன் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோரில் ஒருவருக்கே பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர வேறு யாராவது மகுடம் சூடினால் புருவத்தை உயர்த்தி சிலிர்த்துக் கொள்ளலாம்.

நடால்ஜோகோவிச்

காயத்தால் கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட முடியாமல் போன ரபெல் நடால், 2–வது முறையாக இங்கு பட்டம் வெல்லும் முனைப்புடன் ஆயத்தமாகியுள்ளார். சூப்பரான பார்மில் காணப்படும் நடால் முதல் சுற்றில்  52–ம் நிலை வீரர் ஆஸ்திரேலியாவின் பெர்னர்ட் தாமிக்குடன் மோதுகிறார். இளம் வீரரான தாமிக் உள்ளூர் சூழலில் நன்றாக ஆடக்கூடியவர். அது மட்டுமின்றி அவர் எல்லா தடவையும் ஆஸ்திரேலிய ஓபனில் முதல் சுற்றை வெற்றிகரமாக கடந்திருக்கிறார். ஆனால் இந்த முறை அது நடக்குமா? என்பது சந்தேகம் தான். ரபெல் நடால் கால்இறுதியில் அபாயகரமான வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவை எதிர்கொள்ள வேண்டி வரலாம். இறுதிப்போட்டியில் நடால், ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்த வாய்ப்பிருக்கிறது.

செர்பிய சூரன் ஜோகோவிச்சுக்கு, இது மிகவும் ராசியான போட்டியாகும். 4 முறை ஆஸ்திரேலிய ஓபனை ருசித்துள்ள அவர் முதல் சுற்றில் சுலோவக்கியாவின் லுகாஸ் லாக்கோவுடன் மோதுகிறார். புதிய பயிற்சியாளர் போரிஸ் பெக்கரின் ஆலோசனையின் கீழ் தன்னை பட்டை தீட்டியுள்ள ஜோகோவிச், மறுபடியும் இங்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறார்.

பெடரர் எப்படி?

முன்னாள் நம்பர் ஒன் வீரர் 32 வயதான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருக்கு அண்மை காலமாக தோல்விகளே பரிசாக மிஞ்சி வருகின்றன. வயது ஆகி விட்டதால் அவரது ஆட்டத்திறன் தளர்ந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பெடரர் இல்லை. தன்னால் நடால், ஜோகோவிச்சை விரட்டியடிக்க முடியும் என்று எச்சரித்துள்ளார். 2004, 2006, 2007, 2010–ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றியிருக்கும் பெடரர், இங்கு 2003–ம் ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்கு வராமல் இருந்ததே கிடையாது. முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வைல்டு கார்டு வீரர் ஜேம்ஸ் டக்வொர்த்தை எதிர்கொள்ளும் அவர் 4–வது சுற்றில் பிரான்சின் சோங்காவுடனும், அதை தாண்டினால் கால்இறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டி முர்ரேவுடனும் யுத்தம் நடத்த வேண்டி இருக்கும். 4–ம் நிலை வீரரான ஆன்டி முர்ரே முதல் ரவுண்டில் ஜப்பானின் கோ சோடாவுடன் களம் காணுகிறார்.

இவர்களை தவிர 3–ம் நிலை வீரர் ஸ்பெயினின் டேவிட் பெர்ரர், செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ, தொடர்ந்து 18–வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் களம் குதிக்கும் உள்ளூர் ஹீரோ லெய்டன் ஹெவிட் ஆகியோரும் போட்டியை கடுமையாக்க கோதாவில் நிற்கிறார்கள்.

செரீனாவுக்கு வாய்ப்பு

பெண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையும், 5 முறை சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீதே அனைவரின் கணிப்பும் பதிந்து போய் கிடக்கின்றன. கடந்த ஆண்டில் 11 பட்டங்களை வென்று பிரமிக்க வைத்த 32 வயதான செரீனாவுக்கு, வயது ஏற ஏறத்தான் ஆட்டத்திறனும் கூடிக் கொண்டே போகிறது. மிரட்டல் ராணியாக வலம் வரும் அவர் முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பேர்ட்டியுடன் மோதுகிறார். செரீனா இந்த பட்டத்தை வென்றால், ‘ஓபன் எரா’ வரலாற்றில் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களின் வரிசையில் 2–வது இடத்தில் உள்ள செக்கோஸ்லோவக்கியாவின் மார்ட்டினா நவரத்திலோவா, அமெரிக்காவின் கிறிஸ் எவர்ட் ஆகியோரின் 18 கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்து விடுவார்.

2012, 2013–ம் ஆண்டு சாம்பியனும், 2–ம் நிலை வீராங்கனையுமான பெலாரசின் விக்டோரியா அஸரென்கா, செரீனாவுக்கு சவால் கொடுக்கக்கூடியவராக திகழ்கிறார். இவர் முதல் சுற்றில் சுவீடனின் ஜோஹன்னா லார்சனை சந்திக்கிறார். இதே போல் உலக தரவரிசையில் 3–வது இடம்  வகிக்கும் ரஷியாவின் மரிய ஷரபோவா அமெரிக்காவின் பெதானி மாடக் சாண்ட்சையும், 4–ம் நிலை வீராங்கனை சீனாவின் லீ நா, குரோஷியாவின் அனா கொஞ்ஜூவையும் எதிர்கொள்கிறார்கள்.

போலந்தின் அக்னீஸ்கா ராத்வன்ஸ்கா, இத்தாலியின் சாரா எர்ரானி, ராபர்ட்டா வின்சி, ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், சபினே லிசிக்கி, செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா, செர்பியாவின் ஜான்கோவிச் உள்ளிட்ட முன்னணி வீராங்கனை களும் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதற்கு வரிந்து கட்டி நிற்கிறார்கள்.

சானியா மிர்சா

இந்திய தரப்பில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் ஒரே இந்தியரான 93–ம் நிலை வீரர் சோம்தேவ் தேவ்வர்மன், முதல் சுற்றில் 27–ம் நிலை வீரர் ஸ்பெயினின் பெலிசியனோ லோப்சுடன் மோதுகிறார். இந்த சுற்றை தாண்டினாலே நம்மவருக்கு பெரிய விஷயமாக இருக்கும்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷியுடனும், லியாண்டர் பெயஸ் (இந்தியா), செக்குடியரசின் ராடக் ஸ்டெபனக்குடனும், இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனசுடனும், இந்தியாவின் மகேஷ் பூபதி, அமெரிக்காவின் ராஜீவ் ராமுடனும் ஜோடி சேர்ந்து களம் இறங்குகிறார்கள். பெண்கள் இரட்டையரில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக்குடன் சேர்ந்து விளையாட இருக்கிறார்.

பரிசு எவ்வளவு?

வருகிற 26–ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.182 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.14½ கோடியும், 2–வது இடம் பிடிப்பவருக்கு ரூ.7¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இரட்டையரில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.2.87 கோடி கிடைக்கும்.

இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதல் நாளில் களம் இறங்குவோரில் ஜோகோவிச், செரீனா முக்கியமானவர்கள் ஆவர்.

சாதனை வரிசையில் பெடரர்

*உலக தரவரிசையில் 6–வது இடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தொடர்ச்சியாக பங்கேற்கும் 57–வது கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடர் இதுவாகும். இதன் மூலம் தொடர்ந்து அதிக கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடரில் பங்கேற்ற வீரர் என்ற சாதனை அவரது வசம் ஆகிறது. இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவின் வெய்ன் பெரேய்ரா 56 கிராண்ட்ஸ்லாமில் கலந்து கொண்டதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

*முன்னாள் நம்பர் ஒன் வீரர் 41 வயதான ஆஸ்திரேலியாவின் பாட்ரிக் ராப்டர் மீண்டும் டென்னிஸ் களம் திரும்புகிறார். கடைசியாக 2001–ம் ஆண்டு விளையாடி இருந்த ராப்டர் அதன் பிறகு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் ஓய்வில் இருந்து விடுபட்டு அவர் ஆஸ்திரேலிய ஓபனில் இரட்டையர் பிரிவில் விளையாட உள்ளார். தனது ஜோடியாக சக நாட்டவர் லெய்டன் ஹெவிட்டை சேர்த்துள்ளார். இவர்கள் முதல் சுற்றில் எரிக் பூட்டோராக் (அமெரிக்கா)– ரவென் கிளாசென் (தென்ஆப்பிரிக்கா) ஜோடியை சந்திக்கிறார்கள்.

அவுஸ்ரேலியஒபன்
Comments (0)
Add Comment