ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 370 ரன்களுக்கு சுருண்டது. இந்தப் போட்டியுடன் ஓய்வு பெறும் நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் குறைவான பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் குப்தில், லேதம், நிகோல்ஸ் சொற்ப ரன்களில் வெளியேறினர். வில்லியம்சுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் மெக்கல்லம். சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் ஆடிய மெக்கல்லம் அதிரடியாக ஆடினார். அவருக்கு உதவும் வகையில் 69 பந்துகளை எதிர்கொண்ட வில்லியம்ஸன் 7 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்த மெக்கல்லம், 54 பந்துகளில் சதமடித்து, டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 56 பந்துகளில் விவியன் ரிச்சர்ட்ஸ், மிஸ்பா சதமடித்துள்ளனர்.
79 பந்துகளை எதிர்கொண்ட மெக்கல்லம், 6 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகள் விளாசி 145 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் வந்த ஆண்டர்சன் 72 ரன்களும், வால்ட்டிங் 58 ரன்களும் எடுத்தனர். அந்த அணி அனைத்து விக்கெட்டுளையும் இழந்து 370 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.