ஸ்ரீலங்காவின் புதிய ஆட்சியில் “நீதிதுறையை சுயாதீனமாக இயங்க அனுமதித்துள்ளோம்“ என்பதை எதனையோ அல்லது யாரையோ நோக்கி ஒரு பிரசாரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனுடைய நோக்கம் என்ன? இந்த நோக்கத்தை அடைய ஸ்ரீலங்கா அரசு எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைகின்றன? ஸ்ரீலங்கா அரசு தனக்கெதிரான சர்வதேச விசாரணைகளை முறியடிக்கவே இவ்வகையான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றதா என்பதை குறித்தே இப் பத்தி கேள்வி எழுப்புகிறது.
அதிரடிக் கைதுகள்
ஸ்ரீலங்காவில் கடந்த வாரத்தில் இரண்டு முக்கியமான கைதுகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒன்று ஸ்ரீலங்காவின் நவீன மன்னன், சேிங்களவரின் போர் தலைவன் மகிந்த ராஜபக்சவின் இளைய புத்திரன். ஸ்ரீலங்காவின் அரைவாசி மக்களால் யுத்த வெற்றியின் பொருட்டு கொண்டாடப்படும் மன்னரான ராஜபக்சவின் புதல்வரை ஸ்ரீலங்கா அரசு கைது செய்துள்ளது. ராஜபக்சவின் குடும்பத்தில் ஒருவரை சிறையில் வைத்தால் அது தேசத் துரோகமாக கருதப்படும் சிங்கள மனநிலையின் மத்தியில் இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அழிவுகளுக்கு தேராவாத்திற்கு முக்கிய இடமுண்டு. ஸ்ரீலங்கா ஆட்சி பீடம் என்பதே பௌத்த மத பீடமே. அதன் ஆசியோடே எவரும் ஆட்சி புரிய முடியும். அதற்காகவே ஆட்சி புரிய முடியும். அந்த நிலையில் தீவிர சிங்கள பௌத்த பேரினவாதியான ஞானசாரதேரரை ஸ்ரீலங்கா அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஸ்ரீலங்காவின் வரலாற்றில் சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கைகளுக்காக தீவிர செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தேசத் தலைவர்களாக சிங்கள தேசத்தில் கொண்டாடப்படுகிறார்கள்.
ஞானசார தேரரின் கைது ஒரு நாடகமா?
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலாபொட ஞானசாரதேரர் ஸ்ரீலங்காப் பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அவர் ரணில் குடும்பத்துடனேயே மிக நெருக்கமானவர் என்றும் அண்மையில் அந்த அமைப்பின் நிறுவனர் பரப்பு கதை ஒன்றை அவிழ்த்துவிட்டிருந்தார். அதுமாத்திரமல்ல ஞானசார தேரரை ஆர்ப்பாட்டம் செய்யுமாறு ஆலோசனை வழங்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த முக்கியமான பிரபலம் என்றும் அவர் கூறியிருந்தார்.
யோசிதவின் கைது மகிந்த ராஜபக்சவை பழிவாங்கும் நோக்கத்துடன் சர்வதேசதத்தை திருப்திப்படுத்தும் இரு நோக்கையும் கொண்டது என்றும் ஞானசாரதேரரின் கைது சர்வதேசத்தை மாத்திரம் திருப்திப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கைது என்றும் பேசப்படுகின்றது. குறிப்பாக எவ்வகையான விசாரணைகளை மேற்கொள்வது என்று அதிகம் பேசப்படும் ஒரு நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஸ்ரீலங்கா வரும் நிலையில் இக் கைதுகள் பரபரப்பாக நடந்தேறியுள்ளன.
ஸ்ரீலங்கா நீதித்துறையில் தமிழர்கள்
ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் மாத்திரமல்ல அதற்கு முன்னரும் ஸ்ரீலங்கா நீதித்துறை சிங்களப் பேரினவாத்தின் தமிழ் ஈழர் மீதான ஒடுக்குமுறைக்கு அங்கீகாரம் வழங்கும் ஒரு எந்திரமாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழ் ஈழத்தில் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்றை நடத்தும் உரிமையை சட்டமாகவே ஸ்ரீலங்கா நீதித்துறை கொண்டிருக்கிறது என்பதற்கு ஸ்ரீலங்கா அரசு கடந்த காலத்தில் தமிழ் ஈழர்களுக்கு எதிராக மேற்கொண்ட இனப்படுகொலைகள் சாட்சி.
சிங்கள இராணுவத்தால் தமிழ் ஈழத்தில் பலமுறை இனப்படுகொலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இவைகளில் எதற்காகவது ஸ்ரீலங்கா நீதித்துறை தண்டனை வழங்கியுள்ளதா? மாறாக அவ்வாறு குற்றம் இழைத்தவர்களை காப்பாற்றும் செயல்களிலேயே ஸ்ரீலங்கா நீதித்துறை ஈடுபட்டது. ஆக ஸ்ரீலங்காவின் நீதித்துறை தமிழ் ஈழர்களுக்கு எதிராகவும் பேரினவாத அரசின் கருவியாகவே இயங்குகிறது.
சர்வதேச விசாரணை
ஸ்ரீலங்காவின் நீதித்துறையில் இருக்கும் பலவீனமே தமிழர்களை சர்வதேச விசாரணை ஒன்றை நோக்கி குரல் எழுப்ப காரணமாக அமைந்தது. அதற்கு நெடும் வரலாறே உண்டு. ஸ்ரீலங்கா அரசு மீதோ அதன் நீதித்துறை மீதோ, அதன் விசாரணைகள் மீதோ தமிழ் ஈழ மக்களுக்கு நம்பிக்கை எதுவும் கிடையாது. கடந்த காலத்தில் விசாரணைகள் என்ற பெயரில் தமிழ் ஈழ மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இன்னொருமுறையும் ஏமாற இயலாது. அவ்வாறு இனியும் தமிழ் ஈழர் ஏமாந்தால் அது அவர்களின் வரலாற்றில் மாபெரும் விளைவை ஏற்படுத்தும்.
தமிழ் ஈழ மக்கள் தொடர்ச்சியாக சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி வருகின்றனர். சிங்களப் பேரினவாத அரசின் இராணுவம் நிறைக்கப்பட்ட வடகிழக்கில் இதனை மக்கள் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளனர். பல்வேறு போராட்டங்களிலும் அதனை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற தேர்தல்களின்போது சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்பதையும் தமிழ் மக்கள் தமது ஆணையாக முன்வைத்துள்ளனர்.
இனப்படுகொலையை மறைக்கும் யுக்தி
இனப்படுகொலையை மேற்கொண்ட ஒரு தரப்பு, மகிந்த ராஜபக்சவையும் இராணுவத்தையும் காப்பாற்றுவோம் என்று சத்தியம் செய்கின்ற ஒரு அரசு எப்படி நீதியான விசாரணையை நடத்தும்? மைத்திரி – ரணில் ஆட்சி என்பது குற்றங்களை கண்டுபிடிக்க விசாரணை செய்யவில்லை. குற்றங்களை மறைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே விசாரணை செய்யவுள்ளது. எனவே தமிழ் மக்களை இந்த விசாரணையை நிராகரிப்பதுடன் தமக்கான நீதிக்கான சர்வதேச விசாரணை ஒன்றையே வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலையில் மேற்கண்ட இருவரையும் ஸ்ரீலங்கா அரசு கைது செய்து சிறையில் தள்ளியிருப்பதன் ஊடாக ஸ்ரீலங்காவில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குகிறது என்ற தோற்றத்தை ஸ்ரீலங்கா அரசு ஏற்படுத்த முனைகிறதா? அதன் மூலம் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு முழுமையான சுயாதீன விசாரணையை மேற்கொள்ள தனக்கு தகுதி உண்டென்று சர்வதேசத்தின் தலையில் மிளகாய் அரைக்க முனைகிறதா? அதன் ஊடாக தமிழ் ஈழர்கள்மீதான இனப்படுகொலையை மூடி மறைக்க முயல்கிறதா?
தமிழவன்
செண்பகம்
12.02.2016