ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியில் அசத்திய மேக்ஸ்வெல், திசரா பெரராவுக்கு பஞ்சாப் அணித்தலைவர் பெய்லி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சம்பியன்ஸ் ‘லீக்’ போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்– ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ஹோபர்ட் அணி 6 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் 145 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் 4 விக்கெட்டுக்கு 51ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தது.
அதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் (43 ஓட்டங்கள்) அதிரடியில் அசத்த, பிறகு திசரா பெரரா(35 ஓட்டங்கள்) அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இதனால் பஞ்சாப் அணி 17.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் விருது பெற்ற பெரரா கூறுகையில், பஞ்சாப் அணிக்கு திரும்பி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச போட்டிகள் இருந்ததால் விளையாட முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.
அதேபோல் அணியின் வெற்றி குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணித்தலைவர் பெய்லி கூறுகையில், ஹோபர்ட் அணி சிறந்த அணியாகும். அவர்கள் தோற்றாலும் கடும் சவாலாக இருந்தனர்.
மேக்ஸ்வெல், திசரா பெரரா ஆகியோரின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் எங்களது திறமையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இனி வரும் ஆட்டங்களில் அதை காட்டுவோம் என்று கூறியுள்ளார்.