மேலும் நாட்டின் அனைத்து மக்களினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசியலமைப்பை நிர்மாணிக்கும் நோக்கில் முழு பாராளுமன்றமும் அரசியல் நிர்ணயசபையாக மாற்றப்பட வுள்ளது. இதற்கான பிரேரணை எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதியினால் பாராளு மன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் அமைச்சர் சமரவீர குறிப்பிட்டார்.
இலங்கைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டேவுடன் நேற்றுக்காலை நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியளலாளர் சந்திப்பிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மங்கள சமரவீர மேலும் குறிப்பிடுகையில்
11 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சரை இலங்கை வரவேற்கின்றது. நோர்வே வெளிவிவகார அமைச்சரின் இந்த இலங்கை விஜயத்தின் ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகின்றது. நோர்வே வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் ஊடாக நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
மேலும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றார். அதாவது இலங்கையில் ஜனாதிபதி மைத்திரி்பால சிறிசேனவின் ஆட்சி மலர்ந்து ஒரு வருடம் பூர்த்தியாகி அதற்கான கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளது.
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ய ஆரம்பித்துள்ளன. அந்த உதவிகளை நாங்கள் பெற்றுவருகின்றோம். யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயும் உள்ளக விசாரணை பொறிமுறை கட்டமைப்பின் இறுதி வடிவம் தொடர்பில் தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும்.
இதற்கான பணிகளை மும்முரமாக முன்னெடுத்துவருகின்றோம். குறிப்பாக உளள்க விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதில் நாங்கள் அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றோம்.
இலங்கையில் கடந்த வருடம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இதனூடாக புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம். குறிப்பாக எதிர்வரும் சனிக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட அமர்வு ஒன்று நடைபெறுகின்றது. அந்த அமர்வில் ஜனாதிபதி விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
குறிப்பாக நாட்டின் அனைத்து மக்களினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசியலமைப்பை நிர்மாணிக்கும் நோக்கில் முழு பாராளுமன்றமும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்படவுள்ளது. இதற்கான பிரேரணை எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளை ஈடுசெய்வதே எமது நோக்கமாகும்.
குறிப்பாக மக்களின் கருத்துக்களை பெற்றே புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றோம். அது மட்டுமன்றி நாட்டை அபிவிருத்தி செய்யவும் பொருளாதார ரீதியில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். விசேடமாக பொருளாதார சமூக அபிவிருத்திகளில் தொழில்நுட்ப விடயங்களை உள்வாங்கி செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
அத்துடன் மீன்பிடித்துறை விடயதானம் குறித்தும் நோர்வேயின் வெளிவிவகதர அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த விடயத்திலும் ஒத்துழைப்புடன் செயற்படுவோம். அத்துடன் நோர்வே நாட்டின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெறுவதன் மூலம் எமது நாடு நன்மைடைய முடியும்.
இது தொடர்பிலும் ஏனைய விவகாரங்கள் குறித்தும் நோர்வேயுடன் தொடர்ந்து பல்வேறு மட்டங்களிலும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.