மனைவியின் சமரசத்தால் தான் நான் அணித்தலைவர் பதவியில் நீடிக்கிறேன் என்று இங்கிலாந்து அணித்தலைவர் குக் கூறியுள்ளார்.தற்போது நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி வரை 10 டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் அணித்தலைவர் அலஸ்டயர் குக் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அணித்தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால் குக் பதவியில் இருந்து விலக மறுத்து விட்டார்.இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் வென்ற பிறகு பேட்டியளித்த குக், அணித்தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நாங்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி முடிவில் 0–1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தாலும் தொடரை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சவுதம்டனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி தான் எங்களுக்கு திருப்புமுனையாகும். அந்த வெற்றியில் இருந்து அதே வழியில் எங்கள் ஆட்டத்தை தொடர விரும்பினோம்.
எங்கள் அணியின் வெற்றிக்கு பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது. அவர்களுக்கு எதிராக இந்திய துடுப்பாட்டக்காரர்கள் விளையாடுவது கடினமாக இருந்தது. எனது மனைவி இல்லை என்றால் நான் இப்போது இங்கு அணித்தலைவராக நின்று கொண்டு இருக்க முடியாது. இங்கிலாந்து அணி தொடர்ந்து வெற்றியை பெற முடியாமல் தவித்த போது அணித்தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தேன்.
ஆனால் என் மனைவி தான் எனது முடிவை தடுத்ததுடன் என்னை சமரசம் செய்தார். இதனால் நான் விலகல் முடிவை கைவிட்டேன். எனது திறமை மீதும் எனக்கு நம்பிக்கை இருந்தது என்று கூறியுள்ளார்.