சர்ச்சைக்குரிய விதத்தில் பந்து வீசிய நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர் வில்லியம்சனுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் டிரினிடாடில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, வில்லியம்சன் பந்து வீச்சின் மீது சந்தேகம் எழுந்தது. அவர் விதிமுறையை மீறி பந்து வீசுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கார்டிஃப் மெட்ரோபாலிடன் பல்கலை மற்றும் கார்டிஃப் விளையாட்டுப் பள்ளி ஆய்வு செய்தன. சமீபத்தில் அந்த பல்கலை ஐசிசியிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் வில்லியம்சன், அனுமதிக்கப்பட்ட அளவை விட 15 டிகிரிக்கும் அதிகமாக கைகளை சுழற்றுவதாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு அவரது பந்து வீச்சு முறைகேடானது எனவும் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச வில்லியம்சனுக்கு ஐசிசி புதன்கிழமை தடை விதித்தது. இருப்பினும், இந்த முடிவை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இந்தியாவின் ஹர்பஜன் சிங், இங்கிலாந்தின் ஜெர்மைன் லாசன், மேற்கிந்தியத் தீவுகளின் ஷேன் ஷில்லிங்ஃபோர்டு, பாகிஸ்தானின் சோயிப் மாலிக், சபீர் அஹமது, இலங்கையின் சசித்ரா செனநாயகே ஆகியோர் முறைகேடான பந்து வீச்சின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.