தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அசத்துறாண்டா – அடி தூள்

நாயகன் ஆசிஷ் ராஜ் விசாகப்பட்டினத்தில் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வருகிறார். அவரே அந்த கல்லூரியின் டாப்பராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் எம்.எல்.ஏ.வின் தம்பிக்கும், ஆசிஷ் ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இந்நிலையில், நாயகி ருக்சார் மீர், ஆசிஷ் படிக்கும் கல்லூரியில் வந்து சேர்கிறாள்.

ஆசிஷ் ராஜுக்கும், எம்.எல்.ஏ.வின் தம்பிக்கும் இடையே மீண்டும் ஒருநாள் பிரச்சனை வர, நாயகி ருக்சார் நாயகனை தடுத்து நிறுத்துகிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறிவிடுகிறது. இவர்களது காதலுக்கு இருவரது வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது.

இந்நிலையில், ஆசிஷ் ராஜின் தந்தை சுமன், அவரது மனைவியுடன் கோவில் ஒன்றில் தர்ப்பணம் கொடுக்கிறார். இதை நாயகி ருக்சார் மீர் பார்த்து விடுகிறாள். அவர்கள் சென்ற பிறகு, ஐயரிடம் சென்று யாருக்கு தர்ப்பணம் கொடுத்தார்கள் என்று ருக்சார் கேட்க, காலமான அவர்களது ஒரே மகனுக்கு கொடுத்ததாக ஐயர் கூற, இதை கேட்டு அதிர்ச்சியடையும் ருக்சார், இந்த விஷயத்தை ஆசிஷ் ராஜிடம் சொல்கிறாள்.

இதனால் ருக்சார் மீது கோபமடையும் ஆசிஷ், ருக்சாருடன் சண்டை பிடிக்கிறார். மேலும் தனது பெற்றோரிடம் இந்த விஷயம் குறித்து மறைமுகமாக கேட்க முயற்சி செய்கிறார். அதில் அவருக்கு சில தகவல்கள் கிடைக்க, அடுத்தடுத்து சில தகவல்களையும் சேகரிக்கிறார். இந்நிலையில், மும்பையில் ஒரு ரவுடி கும்பல் ஆசிஷ் ராஜை தேடி வருகிறது.

பின்னர் ஆசிஷ் விசாகப்பட்டினத்தில் இருப்பது அந்த கும்பலுக்கு தெரியவர, அந்த கும்பல் ஆசிஷை கண்டுபிடித்ததா? ஏன் அந்த கும்பல் ஆசிஷை தேடி வருகிறது? ஆசிஷ் யார்? அவருக்கும் மும்பையில் இருக்கும் ரவுடி கும்பலுக்கும் என்ன சம்மந்தம்? ஆசிஷ் – ருக்சார் திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காதல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் ஆசிஷ் ராஜ் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக தான் யார் என்றே புரியாமல் அதுகுறித்து தேடுவதற்காக திரியும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ருக்சார் மீர் ஒரு காதலியாகவும், தனது காதலனை சமாதானப்படுத்துவதில் ஒரு மனைவியாகவும் ரசிக்க வைத்திருக்கிறார். தெலுங்கு படங்கள் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது. அதேபோல் இந்த படத்தில் ஆங்காங்கே கவர்ச்சியான காட்சிகள் வந்து செல்கின்றன. மற்றபடி சுமன், பிரம்மானந்தம், பூசானி கிருஷ்ண முரளி, தனிகெல்லா பரணி, அனுபவ நடிப்பால் ரசிக்க வைத்திருக்கின்றனர். இவர்களுடன் அஜய் கோஷ், அமீஷா படேல், அன்னபூர்ணா, பல்லிரெட்டி, இந்திராஜா உள்ளிட்டோரும் காட்சியின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

ரோம் பிமானா இயக்கத்தில் விசாகப்பட்டினம், மும்பையை மையமாக வைத்து கதை நகர்கிறது. இயக்குநர் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருப்பதால் படம் விறுவிறுப்பாக செல்கிறது. அதற்கேற்ப அடுத்தடுத்த காட்சிகள் வேகமாக வருவதால், ரசித்து பார்க்கும்படி இருக்கிறது.

மணி ஷர்மா இசையில் பாடல்கள் டப் செய்யப்பட்டிருப்பது கேட்பதற்கு சுமாராக தான் இருக்கிறது. பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். வெங்கட் கங்காதரியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `அசத்துறாண்டா’ அடிதூள்.

Comments
Loading...