தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார் விராட் கோலி

தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது 34-வது சதமாகும். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் கோலி இந்த சதத்தின் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகள் இந்திய அணியின் கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 12 சதங்களுடன் கோலி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரைத்தொடர்ந்து சவுரவ் கங்குலி 11 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த 12 சதங்களையும் அவர் கேப்டனாக பொறுப்பேற்ற 43 போட்டிகளில் அடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி 55 சதங்களுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் (100), ரிக்கி பாண்டிங் (71), குமார் சங்ககாரா (63), ஜாக்கஸ் கல்லிஸ் (62) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

இன்றைய போட்டியில் அவர் 100 ரன்களை கடக்க 119 பந்துகள் எடுத்துகொண்டார். இதுவே அவரது மெதுவான ஒருநாள் சதம் ஆகும். முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகவும் 119 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

Comments
Loading...