Sathiyalingam-450x253வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவின், ஓமந்தையில் அமைக்க ஒற்றுமையாக குரல் கொடுப்போம் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து தா.மகேஸ்வரன் என்ற 73 வயது விவசாயி மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புதிய வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது தொடர்பில் இழுபறி நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது.

ஆரம்பத்தில் இருந்தே எனது முதலாவது தெரிவு ஓமந்தையாகவே இருந்தது. இத்திட்டம் வவுனியாவை விட்டு செல்லக் கூடாது என்பதற்காகவே தாண்டிக்குளத்தில் என்றாலும் அமைக்க வேண்டும் என கோரியிருந்தேன்.

இந்த பிரதேச மக்களுக்காக இந்த முதியவர் மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தை நான் மதிக்கின்றேன். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை.

எனது ஒரே தெரிவு ஓமந்தையில் தான் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும். இரண்டாவது தெரிவு பற்றி நான் இனி பேசவில்லை.

சிவக்தி ஆனந்தன் எம்.பி மற்றும் இதில் உள்ள அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்களுடன் இணைந்து நானும் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க முதலமைச்சர் மற்றும் எமது கட்சியின் ஊடாக அழுத்தம் கொடுப்போம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலைய்தை அமைக்க அழுத்தம் கொடுத்து கூட்டமைப்பின் ஒரே தெரிவாக ஓமந்தையே இருக்கும் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராஜா, ஆகியோர் கடிதம் மூலம் உண்ணாவிரதத்தில் இருந்த மக்களுக்கு உறுதி மொழி வழங்கியதுடன் வடக்கு முதலமைச்சர் தொலைபேசியிலும் உறுதிமொழி வழங்கியிருந்தார்.