Designed by Iniyas LTD
கட்டாய ஹெல்மட் மறுபரிசீலனை மனு தள்ளுபடி!
மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு ஒன்றை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், ‘மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணியவேண்டும்’ என்று தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து வக்கீல் ஆர்.முத்துகிருஷ்ணன் என்பவர், வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து, பின்னர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வக்கீல் முத்துகிருஷ்ணன் ‘சீராய்வு’ மனுவை மீண்டும் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘கட்டாய ஹெல்மெட் அணியவேண்டும் என்ற உத்தரவு, அவசர காலநிலையில் பிறப்பிக்கப்படும் சட்டத்தை போல உள்ளது. ஹெல்மெட் அணியவில்லை என்றால், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் விதமாக உள்ளது. ஹெல்மெட் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களின் நலனுக்கு இப்படிப்பட்ட உத்தரவுகளை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஐகோர்ட்டு முதலை கண்ணீர் வடிப்பது தெரிகிறது’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் ஒரு வக்கீல். இவர் பிறருக்கு முன் மாதிரியான நபராக திகழவேண்டுமே தவிர, தரம் தாழ்ந்து இந்த நீதிமன்றத்தின் மீது குற்றம் சுமத்தக்கூடாது.
மேலும் வக்கீலாக இருப்பவருக்கு சட்டம் தெரிந்து இருக்கவேண்டும். இதுபோல சீராய்வு மனுவை தாக்கல் செய்து, மோட்டார் வாகன சட்டத்தை மீறி செயல்பட முயற்சிக்கக்கூடாது.
தேவையற்ற குற்றச்சாட்டுகளை இந்த ஐகோர்ட்டுக்கு எதிராக சுமத்தியதற்காக, மனுதாரருக்கு அபராதம் விதிக்கலாம். ஆனால், அவர் ஒரு மூத்த குடிமகன் என்பதாலும், வக்கீலாக இங்கு நீண்ட காலம் பணியாற்றுவதாலும் அபராதம் எதுவும் விதிக்க விரும்பவில்லை.
தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக, 42 லட்சத்து 53 ஆயிரத்து 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதன் மூலம் 41 ஆயிரத்து 330 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர்.
இதுபோல மரணமடைந்தவர்களும், பலியானவர்களின் குடும்பத்தினரும் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்போது, ‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனத்தை ஓட்டியதால், இந்த விபத்து நடந்தது என்று காப்பீட்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மறுக்கின்றன. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படுகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில், மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர் மீதும் அக்கறை கொள்வது இந்த ஐகோர்ட்டின் கடமையாகும். இதனால், ஹெல்மெட் அணியவேண்டும் என்ற உத்தரவை இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பிறப்பித்தது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும் என்று தனி நபர் இந்த ஐகோர்ட்டை நாடவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஒரு வழக்கை விசாரிக்கும்போது, சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளையும், குறைகளையும் கருத்தில் கொண்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். மக்களின் உயிரை காப்பது இந்த கோர்ட்டின் கடமை ஆகும்.
இதற்காக ‘கட்டாய ஹெல்மெட்’ சட்டத்தை இந்த ஐகோர்ட்டு தேவையில்லாமல் கொண்டு வருகிறது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.
மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள், ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டப்பிரிவு 3 கூறுகிறது. அதே சட்டத்தில் பிரிவு 129, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று கூறியுள்ளது. ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கவேண்டும் என்ற விதியை ஏற்கும்போது, ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதியையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இந்த விதியை பின்பற்ற முடியாது என்று கூற முடியாது. அந்த விதியை மீறி செயல்படவும் முடியாது. எனவே, இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் கூறியுள்ளார்.