தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கல்முனை கணக்காளர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி மனுத்தாக்கல்

கல்முனை கணக்காளர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்முனை மறுமலர்ச்சி ஒன்றியம் அமைப்பின் சார்பில் இன்று(திங்கட்கிழமை) இந்த மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது, தமிழ் மக்களின் கடுமையான அழுத்தங்களையடுத்து, கல்முனை விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டிய நெருக்கடி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் நடந்த சந்திப்பையடுத்து, கணக்காளரை நியமிக்க அரசாங்கம் இணக்கம் வெளியிட்டது.

இந்தநிலையில், கல்முனை விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீடித்து வரும் நிலையில், கல்முனை கணக்காளர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்க, கல்முனை மறுமலர்ச்சி ஒன்றியம் அமைப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, அதிகாரம்மிக்க கணக்காளர் ஒருவர் இன்று நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. உத்தியோகபூர்வமாக கணக்காளர் பதவியை பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்கவில்லை.

எதிர்வரும் புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வின் போது கணக்காளர் பதவியை பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், சிறிதரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Comments
Loading...