Designed by Iniyas LTD
காணாமல் போனோரின் உறவுகள் போராட்டம் நடத்த முடிவு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் முதற் தடவையாக யாழ். மாவட்டத்திற்கு வருவதை முன்னிட்டு காணாமல் போன உறவினர்களை மீட்டுத்தருமாறு கோரி நாளை மறுதினம் நல்லூர் கந்தாமி ஆலய முன்றலிலும், மாவட்ட செயலக முன்றலிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர்.இன்று யாழ். மாவட்ட காணாமல் போன உறவினர்களின் ஏற்பாட்டில் அரசே காணாமல் போன உறவுகளின் தகவலை எங்களிடம் கூறு இல்லை எமக்கான தீர்வினை பெற்றுத்தா என்ற தொனிப்பொருளில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய பதிவு
காணாமல் போனவர்களுடைய தகவல்களை அரசு மழுங்கடித்து வரும் இத்தருணத்தில் அவற்றினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் தகவல்களை கொண்டு செல்லுதல் தொடர்பான கலந்துரையாடல் இன்று திருமறைக்கலாமன்ற கேட்போர் கூடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டு கட்டமாக இடம்பெறவுள்ளது. இப் போராட்டம் நாளை மறுதினம் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாளை மறுதினம் வருகை தரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹ_செய்ன் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் காணாமல் போன உறவினர்கள் சார்பில் மகஜர் ஒன்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் கையளிக்கவுள்ளதாக யாழ். மாவட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள் இதன்போது தெரிவித்தனர்.