Designed by Iniyas LTD
காணிகளுக்கு சென்ற மக்கள் சிறீ.படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
யாழ் கீரிமலை நகுலேஸ்வரத்துக்கு முன்னால் அமைந்துள்ள தமது காணிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளச் சென்ற பொதுமக்கள் காவல்துறையினரால் தடுத்துத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்த பொதுமக்கள், அவர்களுக்கு எதிராகக் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளனர்.
சிறீலங்கா கடற்படையினர் காணிகளைச் சுவீகரிக்கப்போகின்றனர் என அறிவித்த நிலையில் காணி உரிமையாளர்கள் இன்று காலை 9.30 மணியளவில் துப்புரவு செய்யச் சென்ற சமயமே இவர்களைப் காவல்துறையினர் தடுத்துத் திருப்பியனுப்பினர்.
நகுலேஸ்வரத்தில் பொது மக்களின் 183 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த 11 ஆம் திகதி குறித்த பகுதிகளை நில அளவீடு செய்வதற்குச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினரைப் பொதுமக்கள் திரண்டு மறித்துத் திருப்பியனுப்பியிருந்தனர்.
தொடர்சியாக கடந்த 14 ஆம் திகதியும் அளவீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படப் போவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு திரண்ட காணி உரிமையாளர்கள், உயர்பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே அளவீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ள காணியைத் துப்பரவு செய்து தாம் அதில் குடியமரப் போகின்றனர் எனத் தெரிவித்திருந்தனர்.
ந்த அறிவிப்பின்படி அங்கு சென்ற பொதுமக்களைப் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். கடற்படையினரே தம்மை வரவழைத்தனர் என்றும் அவர்களது முறைப்பாட்டின்படியே தாம் காணிகளைத் துப்புரவு செய்ய அனுமதிக்கவில்லை என்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர், உபதலைவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ.கஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களுக்கு ஆதரவாக அங்கு கூடினர். இதன்போது அவர்கள் காவல்துறையுடன் விவாதிக்க, காணி உரிமையாளர்கள் நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தி காவல்துறை நிலையத்தில் அனுமதி பெற்றால் காணிகளைத் துப்புரவு செய்வதற்கு தாம் அனுமதிப்போம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் காவல்துறையினரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவுசெய்தனர்.