Designed by Iniyas LTD
காலனின் கைப்பொம்மையாகி விடாதீர்கள் – சீவி. விக்கி
மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுதல், போட்டிக்கு வண்டி ஓட்டுதல், திறமையைக் காட்ட வண்டியோட்டுதல் போன்றவை கவனக் குறைவை ஏற்படுத்தும். உங்கள் கவனக் குறைவு வண்டிக்கும், அதில் பயணிப்பவர்களுக்கும், தெருவில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள். காலனின் கைப்பொம்மையாகி விடாதீர்கள்.
இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். முழங்காவிலில் 9 மில்லியன் ரூபா செலவில் வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட புதிய பஸ் நிலையக் கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அண்மைக்காலமாக பிரத்தியேக பஸ் உரிமையாளர்களுக்கும், இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் சாரதிகளுக்குமிடையே தினமும் ஒவ்வொரு இடங்களில் வாக்குவாதங்கள், சண்டைகள் நடைபெறுவதை அறிகின்றோம். இது மனதுக்கு வேதனையைத் தருகின்ற ஒரு விடயமாக அமைகின்றது. பிரத்தியேக பஸ் வண்டிகள் ஆயினும் சரி, இ.போ.ச பஸ் வண்டிகள் ஆயினும் சரி நாம் பொது மக்களுக்கும், பிரயாணிகளுக்கும் மிகச் சிறந்ததும் செளகரியமானதுமான ஒரு சேவையை வழங்கவே செயற்படுகின்றோம் என்ற மனப்பாங்கு மேலோங்க வேண்டும்.
எமது கடமை என்ன என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தோமானால் எந்தச் சவால்களையும் சமாளித்துக் கொள்ளலாம் என்றும் அவர் அங்கு தெரிவித்தார். முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் இரண்டு சாரதிகளுக்கிடையே ஏற்பட்ட ஒரு போட்டியானது ஒன்றும் தெரியாத ஒரு 6 வயதுப் பாலகனை பாடசாலை விட்டு வீட்டுக்கு திரும்புகின்ற நேரம் உயிர்துறக்க வைத்துள்ளது. இதனை ஒவ்வொரு சாரதியும் தமது மனதில் ஒரு பாடமாகப் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அண்மையில் உங்களுடைய சேவைகள் தொடர்பான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது என்று அறிகின்றேன்.
எனவே இரண்டு தரப்பினரும் மிகவும் அவதானமாகவும், பற்றுறுதியுடனும், சகோதரத்துவத்துடனும் உங்கள் அரிய சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும். நீங்கள் இந்த அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு உங்கள் வாகனங்களை அல்லது பஸ் வண்டிகளை வீதி ஒழுங்குக்கமைய நிதானமாகச் செலுத்தத் தவறுகின்ற பட்சத்தில், உங்கள் சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பஸ் சேவையின் வழித்தட அனுமதிகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்ற விடயத்தையும் உங்களுக்கு இறுக்கமாக இந்தத் தருணத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். இன்று திறந்து வைக்கப்படுகின்ற பஸ் நிலையமானது இந்தப் பகுதி மக்கள் மிகச் செளகரியமாகத் தங்கியிருந்து தங்கள் தங்கள் பஸ் சேவைகளைப் பெற்றுச் செல்லக் கூடியதாக அமைந்துள்ளது. இதனை அசுத்தப்படுத்தாமல், இதனுடைய அழகை குறைக்காது நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதனைப் பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழல், மக்கள் நலம், முன்னேற்றம் என்று பலதையும் இனி மக்களே சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.
எம்மிடையே காணப்படுகின்ற மிகப் பெரியதொரு பலவீனம் எமது தனிப்பட்ட சொத்துக்களாயின் மிகவும் அவதானமாகவும், அதன் அழகு குன்றாமலும் பாவிப்போம். அதே நேரத்தில் அது ஒரு அரச சொத்தாகவோ அல்லது மாகாணத்துக்குரிய சொத்தாகவோ இருப்பின், அதனை நாம் சீராக பராமரிக்காமல் அழியவிட்டு விடுகின்ற ஒரு தன்மை காணப்படுகின்றது. இந்த நிலை உடனடியாக மாற்றப்படல் வேண்டும். பஸ் நிலையங்களில் பீடி, சிகரெட் புகைத்தல் வெற்றிலை பாவித்து விட்டு எச்சில் உமிழ்தல், சமூக விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தல் போன்ற தீய செயல்களை நிறுத்துவது மட்டுமன்றி, அவற்றில் ஈடுபடுகின்றவர்களை நீங்கள் தற்செயலாக அடையாளம் கண்டால்கூட, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உதவி புரிய வேண்டும். பஸ் வண்டிகளைப் பராமரிப்பவர்கள், ஓட்டுபவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும்.
எமது பணம் நாளுக்கு நாள் அதன் பெறுமதியை இழந்து வருகின்றது. பஸ்வண்டிகளைக் கவனமாகப் பாவிக்காது விட்டாலோ அவற்றை நாளாந்தம் பரிசோதனை செய்து ஆவன செய்யாது விட்டாலோ, சுத்தமாக வைத்திருக்கத் தவறினாலோ அதனால் ஏற்படும் பெரிய விளைவை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பஸ் வண்டிகளின் உதிரிப்பாகங்களின் விலை மிக மிக அதிகம். பணம் கிடைக்காத வரையில் அந்தப் பஸ் வண்டி தரித்து நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படும். இது பிரயாணிகளையே பாதிக்கும். இவற்றையயல்லாம் நாங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இவ்வளவு அறிவுறை கூறும் சீவி விக்கி அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில்வே கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் ரயில்வே கடவையைக் கடந்து சென்ற சம்பவம், கடந்த நேற்று இடம்பெற்றது.
முதலமைச்சர் வாகனம் கடந்து செல்வதற்கு அங்கு கடமையிலிருந்து பொலிஸாரும் உடந்தையாக இருந்தனர். அவர்கள் ரயில் வருகின்றதா என ரயில் பாதையைப் பார்த்து, வரவில்லையென்றவுடன் வாகனத்தை கடக்க சைகையும் காட்டினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்தக் கடவைக்கு அருகிலுள்ள பிறிதொரு பாதுகாப்பற்ற கடவையில் கடக்க முற்பட்ட கார் ஒன்று விபத்துக்குள்ளாகி பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.