Designed by Iniyas LTD
டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது : நிர்பயா தாயார் பேட்டி
டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக உயிரிழந்த மாணவியின் தாயார் கூறியுள்ளார். தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 ஆண்டு சட்டப் போராட்டம் வீணாகிவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
முன்னதாக நாளை மறுநாளுடன் தண்டனைக் காலம் முடிந்தாலும், சிறுவயது குற்றவாளியை விடுதலை செய்ய அனுமதிக்கக் கூடாது என கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவின் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தற்போதைய சட்ட விதிகளின் படி சிறுவயது குற்றவாளியின் விடுதலைக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர். விடுதலைக்குப் பின்னரான மறுவாழ்வு குறித்து சிறுவயது குற்றவாளியுடன் கலந்து ஆலோசிக்குமாறு சிறார் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
மனுதாரரின் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தருமாறு மத்திய மற்றும் டெல்லி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்தனர். இந்த தீர்ப்பு குறித்து கவலை தெரிவித்த நிர்பயாவின் தாயார், நீதிமன்றத்தில் என்ன நடைபெறுகிறது என்று தெரியாமல் அதையே சுற்றியே வந்தேன். தீர்ப்பின் விவரம் முழுவதும் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. என்னுடைய 3 ஆண்டு போராட்டம் வீணாகிவிட்டது. நீதிமன்ற தீர்ப்பில் திருப்தியில்லை என்றார்.