Designed by Iniyas LTD
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: தி.வேல்முருகன் இரங்கல்
தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தம்முடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
தமிழக அரசியலில் 35 ஆண்டுகாலம் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா. தம்முடைய அரசியல் பயணத்தில் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலர், மாநிலங்களவை உறுப்பினர், பொதுச்செயலர் என பொறுப்புகள் வகித்த போதும் ஒவ்வொரு பயணத்தின்போதும் நெருப்பாற்றை நீந்தி கடந்தவர்.
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற காலங்களில் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை பிரச்சனைகளிலும் தமிழினத்தின் உரிமை பிரச்சனைகளிலும் அயராது குரல் கொடுத்தவர் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
தமிழகத்தின் பாலாறு, முல்லைப் பெரியாறு, காவிரி ஆற்று நீர் உரிமை பிரச்சனைகள் தொடங்கி மீத்தேன், கெயில் எரிவாயு உள்ளிட்டவைகளிலும் மண்ணின் உரிமைகளைக் காத்தவர் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள். ஈழத் தமிழர் பிரச்சனையில் தனித் தமிழீழமே தீர்வு; தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்; போர்க்குற்றவாளி ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்திட வேண்டும் என்று சரித்திரத்தின் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக் கூடிய தீர்மானங்களை தாமே சட்டமன்றத்தில் நிறைவேற்றிய போற்றுதலுக்குரிய வரலாற்று பெருமைக்குரியவர்.
ராஜிவ் வழக்கில் பேரறிவாளவன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான சட்டப் போராட்டங்களை தீரமுடன் நடத்திய நம் காலத்தே வாழ்ந்த வீரமங்கை வேலுநாச்சியாராக திகழ்ந்தவர். தமிழினத்துக்கு பெரும் ஆறுதலும் நம்பிக்கையுமாக திகழ்ந்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை ஒட்டுமொத்த தமிழினமே ‘அம்மா’ என போற்றி உச்சிமுகர்ந்தது… அவரும் ஒரு தாயுள்ளத்தோடு தமிழினத்தின் உரிமை பிரச்சனைகளை அணுகி வெற்றி கண்டவர்.
இன்று போற்றுதலுக்குரிய மாதரசி நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே பேரிழப்பாகும். உலகத் தமிழினத்தின் பெருநம்பிக்கை ஆலமரமாக திகழ்ந்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். “அம்மாவை” இழந்து வாடும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சகோதரர்களுக்கு என்னுடைய அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.