தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது

வரும் ஆகஸ்ட் 25ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற இருந்த பாகிஸ்தானுடனான வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது. எல்லையில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில், பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது.modi13

மத்தியில் பிரதமராக மோடி பதவியேற்றவுடன் அண்டை நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்த முடிவு செய்தார். இதனைதொடர்ந்து தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு மோடி அழைப்பு விடுத்தார். அவரும், டில்லி வந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து, பேச்சுவார்த்தையை தொடர இரு நாடுகளும் முடிவு செய்தன. இதன் படி ஆகஸ்ட் 25ம் தேதி இஸ்லாமாபாத்தில், இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையில் அமைதி ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வந்தது. காஷ்மீர் மாநிலம் லே என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நேரடியாக போரிடும் துணிச்சல் இல்லாததால், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதம் என்ற மறைமுக போரில் , பாகிஸ்தான் ஈடுபடுகிறது என குற்றம்சாட்டினார். இருப்பினும் பாகிஸ்தான் தொடர்ச்சியாக காஷ்மீரில் உள்ள இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வந்தது. கடந்த 9 நாட்களில் மட்டும், பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தத்தை மீறி 10 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 42 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்நிலையில், வெளியுறவுத்துறை மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு, கிலானி உள்ளிட்ட காஷ்மீர் மாநில பிரிவினைவாத தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. நாளை டில்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அவர்களுக்கு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்தார். இதற்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது. இது தொடர்பான தகவலையும் பாகிஸ்தான் தூதரிடம் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம்இந்தியாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் மோடியின் அமைதிக்கான நடவடிக்கையை பாகிஸ்தான் குறைத்து மதிப்பிட்டு விட்டது. பாகிஸ்தானின் நடவடிக்கை, எந்தவித பலனையும் தராது. இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் கிடைக்காது. முதலில் அனைத்து பிரச்னைகளையும் பாகிஸ்தான் தீர்க்க வேண்டும். பிரிவினைவாதிகளுடன் பேச்சுநடத்தும் பாகிஸ்தான், இந்திய அரசுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என கூறியுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.இந்த நடவடிக்கை இந்திய நலனுக்காக எடுக்கப்பட்டது எனவும், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது எனவும், பாகிஸ்தானுக்கு கடுமையான செய்தியை அனுப்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மணிஸ் திவாரி கூறுகையில்பாகிஸ்தான் தொடர்பான கொள்கை மோடி அரசிடம் இல்லை என கூறினார். மணிசங்கர் அய்யர், இந்த நடவடிக்கை மோடி அரசின் சிறுபிள்ளைத்தனமானது என கூறினார்.

இது அரசியல் சதி எனவும், இந்தியா இவ்வாறு பதில் தரக்கூடாது எனவும், பாகிஸ்தான் தூதரை, நாங்கள் சந்திப்பதால், இந்தியாவுக்கு எந்தவித பிரச்னையுமில்லை எனவும், பிரிவினைவாத தலைவர்கள் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நியாயமான காரணத்திற்காக தான் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒரே நேரத்தில் நடைபெறாது எனவும் கூறினார். 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்இந்தியாவுடான உறவை சீராக்க பாகிஸ்தான் ராணுவம் விரும்பவில்லை எனவும், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் கூறினார். 

Comments
Loading...