Designed by Iniyas LTD
மின்சார உற்பத்தி – பகிர்மானக்கழக தேர்வால் பயிற்சி தொழிலாளர்கள் குழப்பம்
சென்னை ஐகோர்ட்டில், எம்.ரமணி, என்.யுவராஜ் உள்பட 80 பேர் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறியிருப்பதாவது:- என்ஜினீயரிங் பட்டதாரிகளான நாங்கள் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பல்வேறு காலக்கட்டத்தில் பயிற்சி தொழிலாளராக (அப்ரண்டீஸ்) பணியாற்றினோம்.
பயிற்சி தொழிலாளர்கள் சட்டத்தின்படி, காலிப்பணியிடங்களை நிரப்பும்போது, பயிற்சி தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். இவர்களை வேலைக்கு எடுப்பதற்காக சிறப்பு திட்டங்களை உருவாக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் என்று 375 உதவி என்ஜினீயர்கள் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பில், பயிற்சி தொழிலாளர்களாக பணியாற்றாத என்ஜினீயரிங் பட்டதாரிகளும் கலந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் இப்பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெறுகின்றன. இந்த எழுத்து தேர்வில் பயிற்சி தொழிலாளர்களான நாங்களும் கலந்துகொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்த தேர்வு தொடர்பான அறிவிப்பை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவேண்டும். இந்த தேர்வு எழுத பயிற்சி தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர்கள் அனைவரும் ஜனவரி 31-ந்தேதி (நாளை) நடைபெறும் எழுத்து தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதவேண்டும். ஆனால், இந்த தேர்வின் முடிவினை தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிடக்கூடாது. இந்த வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.