Designed by Iniyas LTD
வவுனியா நெடுங்கேணியில் 5000 இற்கும் மேற்பட்ட சிங்கள குடியேற்றம்?
வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேசத்துக்குள் 5000க்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்களை குடியமர்த்தும் திட்டம் அரசாங்கத்திடம் இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வவுனியா – பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட விண்ணாங்கம்பிட்டி கிராமத்தில் நேற்றையதினம் மூங்கில் பயிர்ச்செய்கையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
பட்டிக்குடியிருப்பு என்கின்ற ஒரு பழமையான கிராமத்தில் மூங்கில் செய்கை செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமமானது 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மக்கள் மீள்குடியேறியதைத் தொடர்ந்து இந்தப் பிரதேசம் மகாவலி எல் வலயத்திற்குள் வருகின்றது.
இதற்கு அண்மையில் உள்ள தனிக்கல்லு குளத்தின் கீழ் உள்ள கிட்டத்தட்ட 250 ஏக்கர் வயல் காணியை மீள்குடியேறிய மக்கள் பெற்றுக் கொள்வதிலே பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தார்கள்.
பிரதானமாக மாகாவலி அதிகார சபையும், பாதுகாப்பு தரப்பும் இந்த 250 ஏக்கர் வயல்காணியை வழங்க முடியாது எனக் கூறியது. அதன்போது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இது தொடர்பில் எனது கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்கள்.
அதன்பின்னர் அக்காணிகள் மக்களிடம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்தின் எல்லைப் புறத்தில் இந்த பட்டிக்குடியிருப்பு உள்ளது.
வெலிஓயா என்ற பகுதியில் தென்பகுதியில் இருந்து பெருந்தொகையான சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அத்துடன் அந்த வெலிஓயாவைச் சேர்ந்த கிராம மக்கள் அனுராதபுரம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களுக்குள் ஒவ்வொரு பகுதிகளை உள்ளடக்கியதாக அவர்களது நிர்வாக, அபிவிருத்தி நடவடிக்கைகள் இருக்கின்றது.
இந்த வெலிஓயா பகுதி மக்களையும், கொக்கச்சான்குளம் மக்களையும் உள்ளடக்கி அண்ணளவாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை நெடுங்கேணி பிரதேசத்திற்குள் இணைத்துக் கொள்ளுகின்ற திட்டமும் அரசாங்கத்திடம் இருக்கின்றது.
ஆகவே, இந்தப் பிரதேசம் பறிபோகக் கூடிய நிலையில் அதற்கான வேலைகள் திரைமறைவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நீண்டகாலமாக போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இந்த மக்களினுடைய காணிகளை துப்பரவு செய்து மூங்கில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு முன் வந்த ராம் அவர்களுக்கு இந்தக் கிராம மக்கள் சார்பாக நன்றிகளைக் கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.
காலப்போக்கில் இந்தக் காணிகள் பறிபோவதைத் தடுப்பதற்கும், மூங்கில் செய்கை மூலம் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்கும் இந்த திட்டம் உதவுகின்றது. இந்த இரண்டையும் முக்கியமானதாக நாங்கள் பார்க்கின்றோம்.
ஏனெனில் போருக்கு பின்னர் பல மக்கள் தமது காணிகளை துப்பரவு செய்து பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கின்றார்கள். இவ்வாறான திட்டங்கள் மூலமே மக்களது காணிகளை பாதுகாக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது உரையின்போது தெரிவித்தார்.