Designed by Iniyas LTD
வவு-வடக்கு மக்களின் வாழ்விடங்களை பார்வையிட்ட பிரதேச செயலர் குழு!
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காஞ்சிரம்மோட்டை , காட்டுப்பூவரசங்குளம் , நாவலர்பண்ணை ஆகிய பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்திற்காக குறித்த பிரதேச மக்களின் வேண்டுகோளின் பெயரில் பிரதேச செயலாளர் தலமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.
வவுனியா வடக்கின் குறித்த பிரதேசங்களில் யுத்தத்திற்கு முன்னர் 150ற்கும் மேற்பட்ட பூர்விக குடிகள் வாழ்ந்த நிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் அயல் கிராமங்கள் மகாவலி எல் வலயம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டது.
இதன் காரணத்தினால் அச்சம் கொண்ட மக்கள் தமது பூர்வீக நிலங்களிற்கு திரும்புவதற்கே அச்சம் கொண்டு அயல் கிராமமான ஒலுமடுவை அண்டிய பகுதிகளில் உறவுகளின் காணிகளில் தற்காலிக வாழ்விடங்களை அமைத்து வாழ்ந்தனர்.
இந்த நிலையில் காஞ்சிரம்மோட்டை , காட்டுப்பூவரசங்குளம் , நாவலர்பண்ணை ஆகிய இடங்களில் உள்ள தமது வயல் நிலங்களில் வயலை மேற்கொண்டபோதும் குடியேறுவதற்கு அச்சம் கொண்டிருந்தனர்.
இக்காலப்பகுதியில் குறித்த மக்களின் வாழ்விடங்களை பாரிய மரங்கள் ஆக்கிரமித்தன. இதனை காரணமாக கொண்ட வன வளத் துறையினர் காடு வளர்ந்த பிரதேசம் தமது ஆளுகை கொண்ட பகுதியென மக்களிற்கு கூறிவந்தனர்.
குறித்த பிரதேசமான தமது பூர்வீக நிலங்களானது அறுதி உறுதிக் காணிகள் எனவும் இதில் அனேகமானவை சொர்ண பூமித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உறுதிகள் உண்டு என பிரதேச செயலாளரை நாடினர்.
அவ்வாறு நாடிய மக்கள் பிரதேச செயலாளர் தங்களின் உறுதிகளைப் பரிசீலித்து உரிய ஆவணங்களை உடையவர்களை சொந்த இடத்தில் மீளக்குடியமர ஆவண செய்யவேண்டும். எனக் கோரிக்கை விடுத்தனர்.
இவ்வாறு விடப்பட்ட கோரிக்கைக்கு அமைய நேற்று முன்தினம் பிரதேச செயலாளர் , உதவிப் பிரதேச செயலாளர் , காணி உத்தியோகத்தர் ஆகியோர் கிராம சேவகர் சகிதம் அப் பிரதேசத்தின் பூர்விகமாக கொண்டு சொந்த உறுதியினையுடைய 70 மக்கள் ஆகியோர் நேரில் சென்று குறித்த கிராமங்களில் மீள் குடியேற்றத்திற்கான சாத்தியப்பாட்டினை ஆய்வு செய்தனர்.
கிராம மக்கள் தாம் தொடர்ந்தும் அயலவர்களின் காணியில் வாழ விரும்பாதமையினால் அப் பிரதேசத்தில் குடியமர தமது விருப்பத்தினையும் வெளியிட்டதோடு ஆண்டாண்டு காலமாக வாழவைத்த எமது இத் தாயக பிரதேசத்திலேயே எம்மை மீளவும் வாழ ஏற்பாடு செய்து தாருங்கள் எனவும் பிரதேச செயலாளரிடம் கோரி நின்றனர்.
இவற்றிற்குப் பதிலளித்த பிரதேச செயலாளர் இக் கிராமத்தின் சொந்த மக்களில் உறுதிக் காணியுடைய வர்களின் மீள் குடியமர்விற்கு உடன் ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
இதனை அடுத்து தமது காணிகளை துப்பரவு செய்யும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.