Designed by Iniyas LTD
அடுக்குமாடிக் கட்டிடம் இடிக்கப்பட்டதால் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் – வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மவுலிவாக்கம் பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் திட்டமிட்ட ஏற்பாட்டின்படி வெற்றிகரமாக வெடி வைத்து தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது, வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.
அதேநேரத்தில் மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு தகர்க்கப்பட்டதால், வீடு வாங்குவதற்கு பணம் செலுத்தியவர்கள் இடிந்து போய் தவித்துக்கொண்டு இருக்கின்றனர். பணம் செலுத்திய மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கிட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். அடுக்குமாடிக் கட்டிடம் இடிக்கப்பட்டதால் அருகில் இருக்கும் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசலடைந்து பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
பாதிப்புக்குள்ளான வீடுகளை செப்பனிட்டு தருவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.