Designed by Iniyas LTD
அண்ணாசாலை ஓமந்தூரில் புதிய விருந்தினர் மாளிகை
சென்னை மாநகரின் இதயப்பகுதியான அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டம் உள்ளது. இதில் பன்னோக்கு அரசு உயர் மருத்துவமனை, கடந்த ஆண்டு கட்டப்பட்ட அரசு புதிய மருத்துவ கல்லூரி கட்டிடங்கள், தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கலை அரங்க கட்டிடங்கள் உள்ளன.
இது தவிர புதிதாக அரசு விருந்தினர் மாளிகை உள்பட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இவை விரைவில் திறப்பதற்கான பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 60 ஆயிரம் சதுர அடியில் ரூ.19 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய 36 அறைகள் கொண்ட அரசு விருந்தினர் மாளிகை கட்டப்பட்டு வருகிறது. இதில் தரைதளத்தில் 16 அறைகளும், முதல் தளத்தில் 16 அறைகளும், 2-வது மாடியில் நவீன வசதிகளுடன் கூடிய 4 ‘சூட்’ அறைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு அறைகளிலும் படுக்கை அறை, பால்கனிகள், கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர முதல் தளத்தில் 4 கூட்ட அரங்கமும், தரை தளத்தில் 2 கூட்ட அரங்குகளும் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் அகில உலக தரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப்பணிகள் நிறைவடையும் நிலையை எட்டி உள்ளது. வரும் மார்ச் மாதம் கட்டுமானப்பணிகளை நிறைவு செய்து, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதற்கு பிறகு முக்கிய விருந்தினர்கள் பயன்பாட்டுக்காக அரசு விருந்தினர் மாளிகை திறக்கப்படலாம்.
பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்படும் அனைத்தும் ஆங்கிலேயர்கள் விதித்து வைத்த கட்டிட விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படுவதால் இயற்கை சீற்றங்களால் பாதிப்படைவதில்லை. குறிப்பாக சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தனியார் மருத்துவமனைகள், அடுக்கு மாடிகுடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சென்னை அரசு ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையின் முதல் டவர் மற்றும் 2-வது டவர் கட்டிடங்கள், மற்றும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட பன்நோக்கு அரசு உயர் மருத்துவமனையும் கட்டிடங்கள் கட்டிட விதிகளுக்கு உட்பட்டு பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டது. இந்த 2 மருத்துவமனைகளும் கூவம் ஆற்றங்கரைகளில் இருந்தாலும், சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் மருத்துவமனை வளாகத்துக்குள் தண்ணீர் புகுந்துவிடவில்லை. மாறாக எந்த சேதமும் ஏற்படவில்லை. கட்டிட விதிகள் இதற்கு ஒரு காரணமாகும். அதேபோல் விபத்துக்களை தவிர்ப்பதற்காக மின்சாரம் அறை, ஜெனரேட்டர்களை தரைதளத்தின் கீழ் உள்ள தளத்தில் அமைக்காமல், மின்சார பயன்பாட்டுக்காக தனியாக ஒரு கட்டிடம் கட்டியதும் ஒரு காரணமாகும். இதேபோன்ற பல்வேறு கட்டிட விதிமுறைகளுக்கு உட்பட்டு விருந்தினர் மாளிகையும் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.