Designed by Iniyas LTD
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு !
அண்ணா பல்கலைகழகத்தின் 37-ஆவது பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு தடை கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம், தமிழக அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஐ.அருள் அறம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், சென்னை அண்ணா பல்கலைக்கழக 37-ஆவது பட்டமளிப்பு வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த மார்ச் 30-ஆம் தேதி, அண்ணா பல்கலைக்கழக ஆட்சி குழு கூட்டத்தில் பல்கலைக்கழக பட்டமளிப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் பதவி காலியாக இருக்கிறது. எனவே, பட்டமளிப்பு விழாவை, துணைவேந்தர் இல்லாமல் நடத்த முடியாது. ஏனெனில், துணை வேந்தர் பல்கலைகழக சாதனை மலரை படிக்க வேண்டும். பட்ட சான்றிதழிலும் துணைவேந்தர்தான் கையெழுத்திட வேண்டும்.
அவ்வாறு துணை வேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடத்துவது, பல்கலைக்கழக விதிகளுக்கு எதிரானது. இது போன்று, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் வேறு ஒருவர் கையெழுத்திட்டு வழங்கிய பட்டத்தை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்துவிட்டன. சென்னை பல்கலைக்கழத்தில் துணைவேந்தர் இல்லாததால் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் உள்ளது.
எனவே, துணைவேந்தரை விரைவாக நியமிக்க உத்தரவிட வேண்டும். அது வரை, அண்ணா பல்கலைக்கழகத்தின் 37-ஆவது பட்டமளிப்பு விழா நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக உயர்கல்வித்துறை, பல்கலைகழக மானிய குழு, அண்ணா பல்கலைகழகம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.