Designed by Iniyas LTD
அனந்தி சசிதரனது ஆதரவாளர்கள் இருவர் கைது
தமிழ் தேசியக்கூட்டமைப்பு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனது ஆதரவாளர்கள் இருவரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அண்மையில் திறக்கப்பட்ட அவரது கட்சி அலுவலகத்தில் தங்கி நின்றிருந்த வேளையிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர்.
கைதான திருச்செல்வம் சம்பந்தமூர்த்தி (வயது 25) மற்றும் செல்வரத்தினம் தவச்செல்வம் (வயது 28) ஆகிய இருவருமே கைதாகியுள்ளனர்.தனது அரசியல் பணிகளை முடக்கும் சதி முயற்சியின் ஓர் அங்கமாகவே இக்கைதும் இடம்பெற்றிருப்பதாக அனந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பினில் மேலும் தெரியவருகையில் அண்மையில் அனந்தியினது வதிவிடத்திற்கு அருகாக சந்தேகத்திற்கிமாக இரவு வேளையில் வாகனமொன்று நடமாடியமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
அத்துடன் இது தொடர்பில் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியுமிருந்தார்.எனினும் முறைப்பாடு தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையினையும் எடுத்திராத வட்டுக்கோட்டைப் பொலிஸார் மறுபுறத்தே அனந்தியின் முறைப்பாடு பொய்யானதென வாக்குமூலமளிக்க அயலவர்களை நிர்ப்பந்தித்து வந்திருந்ததாக தெரியவருகின்றது. அத்துடன் அயலில் வசித்து வரும் நடமாட முடியாது படுத்தபடுக்கையினிலுள்ள வயோதிபர் ஒருவரிடம் தம்மால் ஏற்கனவே எழுதி எடுத்துவரப்பட்ட வாக்குமூலமொன்றில் ஒப்பத்தை பெற்றுசென்றுமுள்ளனர். அதில் அவ்வாறு வாகனமேதும் நடமாடவில்லையென தெரிவிக்கப்பட்டே எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவென அனந்தி முறைப்பாடுகளை செய்துள்ள நிலையில் விடயம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அனந்தி மற்றும் ஆதவாளர்களை பழிவாங்க முனைப்போடு அலைந்து திரியும் பொலிஸாரே தற்போது பொய்க்குற்றச்சாட்டில் தனது ஆதவாளர்களை கைது செய்துள்ளதாக அனந்தி தெரிவித்தார்.எனினும் கைதுக்கான காரணமெதனையும் தெரிவித்திராத பொலிஸார் தம்மை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக கூறியே இருவரையும் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இக்கைதின் பின்னணியில் அங்கு பணியாற்றும் அண்மையில் இணைந்து கொண்டுள்ள தமிழ் பொலிஸார் சிலரும் இருப்பதாக தெரியவருகின்றது. இதனிடையே இவ்விடயத்தை எதிர்வரும் மாகாணசபை அமர்வில் விவாதத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக அனந்தி தெரிவித்துள்ளார்.