Designed by Iniyas LTD
அமெரிக்கா ஒபன் டென்னிஸ்
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 4-ம் நிலை வீரரும், 2 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) இரண்டாவது சுற்றில் இத்தாலியை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் செபியை எதிர்கொண்டார்.
இதில் நடால் 6-0, 7-5, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த சுற்றில் அவர் ரஷிய வீரர் ஆந்த்ரேவை சந்திக்கிறார். 7-ம் நிலை வீரரான சிலிச் (குரோஷியா) 2-வது சுற்றில் 6-1, 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் செர்ஜியை (உக்ரைன்) வீழ்த்தினார். நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச்சுக்கு (செர்பியா) எதிரான ஆட்டத்தில் இருந்து வெஸ்லி (செக்குடியரசு) விலகினார். இதனால் ஜோகோவிச் ஆடாமலே 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் 10-ம் நிலை வீரர் மான்பில்ஸ் (பிரான்ஸ்), ரபெர்ட்டோ வின்சி (இத்தாலி), சோங்கோ (பிரான்ஸ்), ஜான் இஸ்னெர் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். 5-ம் நிலை வீரரான ரோனிக் (கனடா) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ரியான் ஹாரிசன் (அமெரிக்கா) 6-7 (4-7), 7-5, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் போராடி ரொனிக்கை வீழ்த்தினார். இதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
லாத்வியாவை சேர்ந்த அனஸ்டசியா செவஸ்டோவா 7-5, 6-4 என்ற கணக்கில் முகுருஜாவை வீழ்த்தினார். இரண்டாம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-2, 7-6 (9-7) என்ற கணக்கில் பரோனியை (குரோஷியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் 4-ம் நிலை வீராங்கனை குவிட்டோவா (செக் குடியரசு), வோஸ்னியாக்கி (டென்மார்க்), மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.