Designed by Iniyas LTD
அமெரிக்கா மெக்சிக்கோ தாக்குதல் தலைவர் கைது
அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லையில் அமைந்திருக்கும் ரெய்னோஸா நகரத் தெருக்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் தொடர்பான வன்முறைகள் அதிகம் இருக்கும் இந்தப் பகுதியில், முக்கிய கும்பல் ஒன்றின் தலைவர் கைதுசெய்யப்பட்ட பிறகு, இந்த மோதல் வெடித்தது.
“அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், அரசு படையினரைத் தாக்கினார்கள்” என அதிகாரபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள், ஆயுதம்தாங்கியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
நகரின் பல பகுதிகளில் தடைஏற்படுத்தப்பட்டு, ஆயுததாரிகளால், சில வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடப்பதாலும், சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாலும், பல பிரதான சாலைகளைப் பயன்படுத்த வேண்டாமென அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர். வெள்ளிக்கிழமை மதியம் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று காலையில் எல் கஃபே என்று அறியப்படும் கல்ஃப் கார்ட்டல் என்ற போதைப் பொருள் கும்பலின் தலைவனை அதிகாரிகள் கைதுசெய்தனர். இதையடுத்தே கலவரம் வெடித்தது. தமாலிபாஸ் மாகாணத்திலும் ரெய்னோஸா நகரிலும் கல்ஃப் கார்ட்டல் கும்பல் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவருகிறது.
ஆனால், 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எக்ஸ் – 20 என்று அறியப்பட்ட மரியோ அர்மாண்டோ ரமிரெ ட்ரெவினோ என்ற முக்கியத் தலைவர் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டது அந்தக் குழுவைப் பலவீனமாக்கியது. இதையடுத்து, அந்தக் குழுவின் பல பிரிவுகளுக்குள் மோதல் ஏற்பட்டது.
இது தவிர கல்ஃப் கார்ட்டெலுக்கும் அதன் எதிரி குழுவான லோஸ் ஸெட்டாஸுக்கும் இடையில் நடந்துவரும் மோதல்களாலும் ரெய்னோஸாவும் பிற நகரங்களும் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிவருகின்றன.
அமெரிக்காவில் நுழைவதற்கு மிக முக்கியமான பகுதியாகக் கருதப்படும் அந்த பிராந்தியத்தை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக இரண்டு குழுக்களும் மோதிவருகின்றன.