Designed by Iniyas LTD
அமெரிக்க உயர்மட்டக் குழு தைப்பொங்கலுக்கு முன்னர் சிறிலங்காவுக்குப் பயணம்
தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தலைமையிலான அமெரிக்க உயர்மட்டக் குழு தைப்பொங்கலுக்கு முன்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஜனவரி இரண்டாம் வாரம் இந்தக் குழுவினர் கொழும்பு
வரத் திட்டமிட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. றொபேட் ஓ பிளேக்கிற்குப் பதிலாக, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலராக அண்மையில் நியமிக்கப்பட்ட நிஷா தேசாய் பிஸ்வால் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
எனினும், இவரது பயணம் தொடர்பான தகவல்களை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமோ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமோ இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், நிஷா தேசாய் பிஸ்வால் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளார் என்பதை, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு அமைய, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படுள்ள முன்னேற்றங்கள் குறித்து, நிஷா தேசாய் பிஸ்வால் தலைமையிலான குழு மதிப்பீடுகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிசையும் ஏனைய சிறிலங்கா அதிகாரிகளையும் சந்திக்கவும் நிஷா தேசாய் பிஸ்வால் திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் அடிப்படையில், வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், அமெரிக்க காங்கிரசின் உயர்நிலைக் குழுவொன்றும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, ஜெனிவா தீர்மானத்துக்குப் பிந்திய நிலைமைகள் குறித்து மதிப்பீடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.