Designed by Iniyas LTD
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றிற்கு ஜூவாலா – அஸ்வினி ஜோடி முன்னேற்றம்!
அமெரிக்க ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஜூவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தையச் சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 16-ஆவது இடத்திலுள்ள இந்தியாவின் சாய் பிரனீத், 21-17, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் ஹூவாங் யூஷியாங்கை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 58 நிமிடங்கள் நடந்தது. பிரனீத் காலிறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்திலுள்ள ஹாங்காங்கின் லாங் அங்குஷ்ஸ் எதிர்கொள்கிறார்.
இதேபோல இந்தியர்களான குருசாய் தத், ஜப்பானின் டகுமா ஈடாவிடமும், ஜெயராம், சீன தைபேயின் சூ டியன் சென்னிடமும் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் தோல்வியைத் தழுவினர். மகளிர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்திலுள்ள இந்தியாவின் ஜூவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி, துருக்கி ஜோடியான ஓஸ்கி பேரக் – நெஸ்லிஹன் யுகிட் ஜோடியை 21-10, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
மேலும் ஜூவாலா ஜோடி காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்திலுள்ள ஜெர்மனியின் ஜோஹன்னா காலிசுவ்ஸ்கி – கர்லா நெல்டி ஜோடியை எதிர்கொள்கிறது. ஆடவர் பிரிவில் மனு அத்ரி – சுமீத் ரெட்டி ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.