Designed by Iniyas LTD
அம்பாந்தோட்டை காணிகள் தொடர்பில் சீனா அதிருப்தி!
அம்பாந்தோட்டையில் காணிகளை அபகரிக்க சீனா முனைவதாக, மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சீன அரசாங்கம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பந்தோட்டை சிறப்பு பொருளாதார வலயத்துக்கு காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக பொது மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்கள் தொடர்பாக, சீன அரசாங்கத்திடம் மூன்று சீன நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளன.
கடந்த 6 ஆண்டுகளாக சிறிலங்காவில் இயங்கி வரும் இந்த நிறுவனங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சீன அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.
அத்துடன் சீனா தொடர்பாக முன்னெடுக்கப்படும் பொய்யான பரப்புரைகள் குறித்து அதிருப்தியடைவதாகவும், சீன அரசினால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரே, அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கரில், சிறப்பு பொருளாதார வலயத்தை அமைக்கும் சீனாவின் திட்டத்துக்கு எதிராக பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.