Designed by Iniyas LTD
அம்மா! உன்னில் தீயாக, விழி நீராக!

அம்மா…..
நான் எங்கேயும் போய்விடவில்லை….
உன்வயிற்றில் எரியும் தீயாக
உன்விழிகளில் வழியும் நீராக
நான் இருக்கிறேன் ……
இருளடைத்த என்உறைவிடத்திலும்
கேட்க முடிகிறது உன் அழுகுரல்….
அந்தரித்துக் கொண்டே உன்னைத்
தேடி அலைகிறது என்மனமும்….
என்குரலின் நியாயத்தை
இந்த உலகறியும்……
என் நிலத்தின் வலியனைத்தும்
இவ்வுலகு அறியும்…..
இருந்தும்
என்னையும் உன்னையும்
அறியாதிருக்கிறது……
போகட்டும் அம்மா
வெள்ளிக் காசுகளுக்கு உன்பிள்ளை
விலைபோகவில்லை என நிமிர்ந்திரு….
உன்வலி நான் உணர்கிறேன்
ஓடிவரமுடியாத் தூரமெனினும்
உன்னுள்ளே இன்னும் குழந்தையாக
நானிருக்கிறேன்……
நீ இழுத்து வைத்திருக்கும்
உன் மூச்சில்
என் உயிர் இன்னமும் உள்ளது…..
நம்பியிரு தாயே
நீ உயிரோடு வாழும்வரை
உன்னோடு நானிருப்பேன்…..
நீ உண்ணும் ஒருபிடியிலிருந்தும்
நீ அருந்தும் சில துளிகளிலில் இருந்தும்
என் பசியையும் தாகத்தையும்
தணித்துக் கொண்டிருக்கிறேன்…..
தயவுடன் தாயே….
பட்டினியாய் இருந்துவிடாதே….
எனக்கான தீர்ப்பு
இன்னமும் எழுதப்படவில்லை….
இன்றில்லாவிடினும்
எனக்கான தீர்ப்பு எழுதப்பட்டே ஆகும்…
அப்போது நீயும் நானும்
இல்லாவிட்டாலும் கூட….
தாயே…….
வலியறியா உலகிற்கும்
ஒருநாள் வலிஎடுக்கும்………
இது உன்னுடையதும்
என்னுடையதுமான சாபமல்ல
வரலாற்றின் நியதியம்மா.
என்னுடைய உணவுத்தட்டையும்
என்னுடைய காற்செருப்பையும்
நான் அணிந்திருந்த சாமிக்கயிற்றையும்
என் தம்பிகளும் தங்கைகளும்
அணிந்துகொள்ளட்டும்.
அவர்களை நீ அரவணைத்திரு….
வரலாறு என்னை விடுவிக்கும்.