தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியலுக்கு இடங்கொடுக்காமல் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முன்வரவேண்டும் –சிவிவிக்னேஸ்வரன்

நாம் ஒரு காலத்தில் இயக்கங்கள், இராணுவம், அரசியல்வாதிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. ஆனால் இந்த மூன்று தரப்பாருமே தமது சுயநலம் கருதியே செயற்பட்டார்கள். ஆனால் எமது வட மாகாண சபை வந்ததன் பின்னர் முறையான நிர்வாகம் நடக்க வேண்டிய ஒரு கடப்பாடு எம்மைச் சார்ந்துள்ளது. இனியும் எங்கள் அலுவலர்கள் பழைய மாதிரி நடந்துகொள்ளாமல் அரசியலுக்கு இடங்கொடுக்காமல் மக்கள் தேவைகளை முறைப்படி பூர்த்தி செய்ய முன்வரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வட மாகாண சபையால் வவுனியா வடக்கு புளியங்குளம் இந்துக் கல்லூரியில் இரு தினங்கள் நடத்தப்படும் நடமாடும் சேவையின் ஆரம்ப நாள் நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு இன்று வியாழக்கிழமை உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது உரையின் முழு விவரம் வருமாறு:- இன்று ஒரு முக்கியமான தினம். நடமாடும் சேவை ஒன்றை நடத்தி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று பல மாதங்களாக எண்ணிக் கொண்டிருந்தோம்.

ஆனால் பல காரணங்களால் இதனைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வரவேண்டிய அவசியம் எழுந்தது. இன்று இங்கு நடமாடும் சேவையை நடத்த நாம் எத்தனிக்கும்போதும் பல சிக்கல்களையும் புறக்கணிப்புக்களையும் எதிர் கொண்டே நடத்த வேண்டியுள்ளது. இன்று பிரதம செயலாளர் சமுகமளிகவில்லை. இது பற்றிப் பல நாள்களுக்கு முன்னர் அவருக்கு தெரிவித்திருந்தாலும் அவர் கொழும்புக்குப் போய்விட்டார் என்று அறிகின்றோம். ஏன் உங்களால் நடவடிக்கை எடுக்க முடியாதா என்று கேட்பீர்கள்.

ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவேண்டியது மத்திய பொது சேவைகள் ஆணைக்குழுவே என்று புதியதொரு கருத்தை நாம் கேட்காமலே உள்ளடக்கியுள்ளார் எமது பிரதம நீதியரசர் என்று அரசாங்கத்தால் அடையாளம் காட்டப்படுபவர் அண்மைய வழக்கொன்றில். எனவே எந்தளவுக்கு எமது நடவடிக்கைகளில் எமது ஆளுநரும் பிரதம செயலாளரும் பங்குபற்றுவார்கள் என்பதில் கருத்து வேற்றுமைகள் உருவாகியுள்ளன. எது எவ்வாறு இருப்பினும் எமது மக்களின் நலன் கருதியே இந்த நடமாடும் சேவையைத் தயார் செய்தோம்.

மக்கள் இதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம் என்று எண்ணுகின்றோம். முதலாவது நேரடித் தொடர்பு. அதாவது நீங்கள் எனக்கு உங்கள் குறை பற்றி எழுதினால் அதனைப் படித்து விட்டு எமது சிரேஷ்ட அதிகாரியிடம் அது பற்றி அறிக்கை கேட்கின்றேன். அவர் தனக்கு கீழ் உள்ள அந்தந்த மாவட்டத்தின் அல்லது பிரதேச அலுவலரிடம் அறிக்கை கேட்கின்றார். அவர் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் உள்ள செயற்பாட்டு அதிகாரியிடம் அறிக்கை கேட்க அவர் உங்கள் குறை பற்றி விசாரித்து அறிந்து தமது அறிக்கையை அவருக்கு மேலுள்ள அந்த அதிகாரிக்கு அனுப்ப அதனை அவர் எமது செயலாளருக்கு அனுப்பி அவர் எனக்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றார்.

அதன் பின்னர் தான் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஆராய்ந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கின்றோம். அநேகமாக இந்தச் செயற்பாடு கிட்டத்தட்ட குறைந்தது இரண்டு மாத காலம் எடுக்கின்றது. இதனைத் தவிர்த்து உரிய அலுவலர்கள் கிட்டவே இருந்து உங்கள் குறைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதாலேயே இந்த நடமாடும் சேவையை ஒழுங்குபடுத்தினோம். நேரடித் தொடர்பானது எமக்குப் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து அவரது குறைகளை நேரடியாக அறிந்து கொள்ளவும் அது பற்றி நடவடிக்கை எடுக்கவும் வசதி அளிக்கின்றது. அடுத்தது வெளிப்படைத் தன்மையை நாங்கள் எங்கள் செயல்களில் உட்புகுத்துகின்றோம்.

திரை மறைவில் நின்று சோம்பேறித் தனத்தால் தாமதிப்பதும் அல்லது வேறு எதிர்பார்ப்புக்களை உத்தேசித்து தாமதிப்பதும் தவிர்க்கப்படுகின்றது. அலுவலர்கள் யாவரும் ஒருங்கு கூடி இங்கிருப்பதால் உடனுக்குடனேயே தீர்மானங்களை நாங்கள் எடுக்க இது உதவுகின்றது. அது மட்டுமல்ல. வெளிப்படைத் தன்மை என்று கூறும் போது அரசியல் எமது நடவடிக்கைகளில் உட்புகாத வண்ணம் தவிர்க்கின்றோம். அரசியல் காரணங்களுக்காக நடவடிக்கைகளை எடுத்து மது அலுவலர்கள் பலர் பழகிவிட்டனர்.

மனிதாபிமான முறைப்படி – சட்டப்படி – நியாயப்படி என்னென்ன தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்ற காலம் போய் எந்த அரசியல்வாதிக்குச் சார்பாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியே எமது அலுவலர்கள் பலரின் மனதில் பூதாகாரமாக வடிவெடுத்து அவர்களை வாட்டி வருகின்றது. முறையாக நடவடிக்கை எடுக்க எத்தனிக்கும் ஒரு அலுவலரைக் கூட அரசியல்வாதிகள் தண்ணீர் இல்லாக் காட்டுக்கு அனுப்பி விடுவோம் என்ற தகாததொரு தண்டனையை வெளிக்காட்டி அவர்களின் வேலைகளைச் சாதித்துக் கொள்கின்றார்கள்.

அந்த அரசியல்வாதிகளுக்கு வேண்டியது அடுத்த தேர்தலில் தமக்கான வெற்றி அல்லது தமது இனத்தின் விருத்தியும் மேம்பாடும் அல்லது தமது அடிவருடிகளின் அன்பும் அனுசரணையும். நடைமுறைப்படுத்தும் வேலைகள் காலக் கிரமத்தில் சமூகத்தில் அதிர்ச்சி தரக்கூடிய பின்விளைவுகளை ஏற்படுத்துமா என்ற கேள்வி அவர்கள் மனதில் எழுவதில்லை. எனவே அவற்றைத் தவிர்த்து வெளிப்படையாக சட்ட திட்டங்களுக்கு அமைவாக, நியாயமான முறையில் தீர்மானங்களை எடுக்க இந்த நடமாடும் சேவை உதவி அளிக்கின்றது. மூன்றாவது பதிலளிக்க வேண்டிய ஒரு கடப்பாட்டை நாங்கள் இந்த நடமாடும் சேவையினால் நிலைநிறுத்துகின்றோம்.

பல மக்கள் எங்களிடம் குறை கூறுவது யாதெனில் நாங்கள் இத்தனை கடிதங்கள் அனுப்பினோம், எத்தனைமுறை சென்று கண்டோம் எமக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை என்பதே. இதனைத் தவிர்த்து அம்மக்களின் குறைகளைத் தீர்த்துவைப்பதில் இருக்கும் சிரமங்களை வெளிக்கொண்டுவந்து அவற்றை ஆராய்ந்து பார்த்து முடியுமெனில் அவற்றிற்கு விடைகாணச் செய்கின்றது இந்த நடமாடும் சேவை. நான்காவதாக ஒரு முக்கிய விடயத்தை நான் உங்கள் எல்லோருக்கும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து இங்கு இருந்த சூழலானது எம்மையெல்லாம் ஆணைகளை நிறைவேற்றும் ஆட்களாக மாற்றியுள்ளது. சுயமாகச் சிந்தித்து எதுசரி எதுபிழை என்று தீர்மானம் எடுத்து சரியானதைச் செய்வது பற்றி நாங்கள் சிந்திக்க மறந்துவிட்டோம்.

நேற்றுத்தான் ஓர் இளைப்பாறிய சிரேஷ்ட சிங்கள அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தேன். “நாம் சேவையாற்றும் போது எது சரியென்பதே எமது நோக்காக இருந்தது. நாம் சரியென்று கண்டால் எந்த அரசியல்வாதியிடமும் அவர்களின் கோரிக்கையை எம்மால் இந்த இந்தக் காரணங்களுக்காக ஏற்க முடியாதென்று துணிந்து கூறிவிடுவோம்” என்றார். இதுவரை காலமும் எமது சூழல் வித்தியாசமாக இருந்தது. இயக்கத்தினரின் ஆணைகளை நாம் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இராணுவத்தினரின் ஆணைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

அல்லது ஒருசில அரசியல்வாதிகளின் ஆணைகளையும் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இந்த மூன்று தரப்பாருமே தமது சுயநலம் கருதியே செயற்பட்டார்கள். ஆனால் எமது வட மாகாண சபை வந்ததன் பின்னர் முறையான நிர்வாகம் நடக்க வேண்டிய ஒரு கடப்பாடு எம்மைச் சார்ந்துள்ளது. இனியும் எங்கள் அலுவலர்கள் பழைய மாதிரி நடந்துகொள்ளாமல் அரசியலுக்கு இடங்கொடுக்காமல் மக்கள் தேவைகளை முறைப்படி பூர்த்தி செய்ய முன்வரவேண்டும். எந்நேரமும் மற்றவர்கள் ஆணையை எதிர்பாராமல் பொறுப்புள்ள ஓர் அதிகாரி என்ன நடவடிக்கையை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் எடுக்கவேண்டும் என்று சிந்தித்து அதன் அடிப்படையில் செயலாற்ற முன்வரவேண்டும்.

எமது உறுப்பினர்கள் கூட முன்னர் அவ்வாறு நடந்ததே, தற்பொழுதும் அதேபோன்று நாம் கூறுவது போல் நீங்கள் நடக்கவேண்டும் என்று அலுவலர்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம். இப்பேர்ப்பட்ட நடமாடும் சேவைகள் அப்பேர்ப்பட்ட சிந்தனைகளுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது. எது சரி எது முறை எது நியாயம் என்று அறிந்து சட்டப்படி செயலாற்ற விழைவதே இந்த நடமாடுஞ் சேவையின் குறிக்கோள். இவ்வாறு பலதையுங் கூறிக்கொண்டு போகலாம் சிலவேளை இன்று சில அலுவலர்கள் வராதிருப்பதால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கலாம். அதற்காக நாங்கள் வலைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

உங்கள் குறைகளைக் றித்துக்கொண்டு போய் அல்லது பதிவு செய்து கொண்டு போய் ஒரு சில நாள்களுக்குள் அதற்கான தீர்வினைப் பெற முயற்சி செய்வோம். ஒன்றை உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் கூற ஆசைப்படுகின்றேன். இரண்டு மூன்று தடவைகள் புலிகள் அல்லாத பிற இயக்கங்களினால் எனது மல்லாகம் நீதிமன்றம் தீ வைத்தலுக்கும், திடீர்த் தாக்குதலுக்கும் உள்ளாகியது. அன்றிரவே தீயை அணைத்துத் தீங்குகளைச் சரிசெய்து அடுத்த நாள் மக்கள் நீதிமன்றத்தை மதிப்பாகக் கொண்டு நடத்தினேன். எதுவந்தாலும் நாம் முன்னேற முயற்சி செய்யவேண்டும்.

அதற்கு அந்தக் காலத்தில் எனதுருமை அலுவலர்கள் துணை இருந்தார்கள். அதனை இன்றும் எனது அன்பான அலுவலர்களிடம் எதிர்பார்க்கின்றேன். இன்று இங்கு சில அலுவலர்கள் வராமைக்குக் காரணம் அரசியலே. இதைத்தான் நாங்கள் ஊரறிய உலகறியக் கூறிக்கொண்டு வருகின்றோம். அரசியல் எமது நிர்வாகத்தைச் சீரழிக்கின்றது. இவர்களின் செயற்பாடு எப்படி இருக்கின்றது என்றால் கணவனைப் புறக்கணித்து அடுத்த வீட்டுக்காரனின் அரவணைப்பினுள் செயற்படும் மனைவி போல் இருக்கின்றது.sv vikki

அடுத்த வீட்டுக்காரன் அதிக அதிகாரங்கொண்ட அலுவலன் என்பதால் அவனை அண்டி வாழவும் கணவனைப் புறக்கணிக்கவும் எத்தனிக்கும் மனைவிமார் காலக்கிரமத்தில் தமது கடமையையும், கடப்பாட்டினையும் புரிந்து குடும்ப நன்மையை முன்வைத்து வாழ வேண்டி முற்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எமக்குண்டு. அடுத்த வீட்டுக்காரன் சலுகைகள் தருவது தன் நன்மைக்கே என்பது மனைவிக்கு காலஞ்செல்லச் செல்லப் புலனாகும். அவன் தன் காரியம் முடிந்ததும் இவளை நட்டாற்றில் விட்டு விட்டுப் போய்விடுவான் என்பதும் புரியவரும்.

கணவனாகிய நாங்கள் இப்பேர்ப்பட்ட மனைவிமார்களின் தப்பான தரங்கெட்ட நடத்தையைப் பொறுமையுடன் கவனித்து வருவோம். எமக்கு எமது குழந்தைகளே முக்கியம். அவர்களுக்காக இந்தத் தரங்கெட்ட நடவடிக்கைகளையும் கண்காணித்து ஆனால் கவனிப்போடு செயலாற்றி வருவொம். நாட்கள் மாறும் சூழல்கள் மாறும் மனைவிமார் எம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்டு ஒழுங்காகக் குடும்பம் நடத்துங் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று கூறி இன்றைய இந்த நடமாடுஞ் சேவையைச் செவ்வையாக நடாத்த எல்லோர் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றேன். – என்றார்.

Comments
Loading...