Designed by Iniyas LTD
அரசு புறம்போக்கு நிலங்களில் பதாகைகள் வைக்க நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் “அரசுக்கு சொந்தமான நிலம்” என பதாகைகள் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த ரத்தினம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாக புகார் தெரிவித்திருந்தார். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆக்ரமிப்பு நிலங்களை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்ரமணியன், கிருபாகரன் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து, அவற்றில், “அரசுக்கு சொந்தமான நிலம்” என பதாகைகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.