தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகளுக்கு நேர்ந்தது இயற்கை மரணம் – டாக்டர்கள் சங்கம்

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகளுக்கு நேர்ந்தது இயற்கை மரணம் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் கே.செந்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-child

தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பிற்கு எடைகுறைவு, மஞ்சள் காமாலை, மூச்சுத்திணறல், குறை பிரசவம் உள்ளிட்ட காரணங்கள் தான் காரணம். மருத்துவர்கள், செவிலியர்கள் மீது புகார் கூறுவது ஏற்கமுடியாத ஒன்று.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் போதுமான அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருந்து வருகிறார்கள். எனவே மருத்துவர்கள் பற்றாக்குறை தான் காரணம் என்று கூறிவிட முடியாது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருந்தால் மருத்துவமனையையும், ஊழியர்களையும் குறை சொல்லலாம். ஆனால் 3 நாட்களை வைத்து மருத்துவமனையை ஒப்பீடு செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 2 பச்சிளங்குழந்தைகள் சராசரியாக இறக்கின்றனர். ஒரு வருடத்துக்கு 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 30 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அதிலும், ஒரு மாதத்துக்குட்பட்ட குழந்தைகள் 20 ஆயிரம் வரை உயிரிழக்கின்றனர். இதற்கு முறையான ஊட்டச்சத்து குறைபாடும், அறியாமையும், பழக்க வழக்கங்களும்தான் காரணம். இதனை தடுக்க மருத்துவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறையே உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணம் என்றும், காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் தீவிரம் காட்டப்படுவதில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால் தற்போது வரை 2,600 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதில் ஆயிரம் காலிப்பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையான காரணம் தெரியாமல், மருத்துவர்களை குறை சொல்வது என்பது தவறு. பச்சிளங்குழந்தைகளுக்கு நேர்ந்தது இயற்கையான மரணங்கள் தான். வேறு எந்த காரணமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, தமிழ்நாடு அரசு டாக்டர் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், இந்திய மருத்துவ கழக மாநில தலைவர் டாக்டர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments
Loading...