Designed by Iniyas LTD
அரையிறுதியிலாவது சாதிப்பாரா ஹல்க்
நெய்மர் இல்லாததால் பிரேசில் அணி முன்களத்தில் ஸ்டிரைக்கர் ஹல்க்கையே பெரிதும் நம்பியுள்ளது. ஹல்க் இன்னும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிலி அணிக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட்டின்போது கோல் அடிக்கத் தவறினார். இருந்தாலும், காலிறுதியில் கொலம்பியாவுக்கு எதிராக ஃபார்முக்குத் திரும்பினார். அவரது கோல் முயற்சிகளை கொலம்பியா கோல் கீப்பர் டேவிட் ஆஸ்பினா வெற்றிகரமாகத் தடுத்தார். எனவே, அரையிறுதியில் ஜெர்மனிக்கு எதிராக ஜொலிக்க வாய்ப்புள்ளது.
ஹல்க்குக்கும் ஜெர்மனியின் லெஃப்ட் பேக் பெனிடிக்ட் ஹோவெட்ஸுக்கும் தான் போட்டி. திடகாத்திரமான உடல்வாகுள்ள ஹல்க்கை எதிர்கொள்வதில் பெரும்பாலான டிஃபண்டர்கள் திணறி வருகின்றனர். அதோடு ஹல்க் இடதுகாலின் மூலம் பவுர்ஃபுல் ஷாட்கள் அடிப்பதில் வல்லவர். ஹல்க்கின் இந்த பலத்தை அறிந்து ஹோவெட்ஸ் நுட்பமாக செயல்பட்டால் ஜெர்மனியின் பின்களம் இன்னும் வலுவாகும்.
டேவிட் லூயிஸ் – தாமஸ் முல்லர்
தியாகோ சில்வா சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் பிரேசில் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் டேவிட் லூயிஸ். கொலம்பியாவுக்கு எதிராக ஃப்ரீ கிக்கை 30 மீட்டர் தூரத்தில் இருந்து கோல் அடித்து பெயர் எடுத்து, அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர்கள் வரிசையில் நெய்மருக்கு அடுத்த இடத்தில் உள்ளார். தியோகோ சில்வா ஆடாததால் பிரேசிலின் பின்களம் முழுக்க முழுக்க லூயிஸையே நம்பியுள்ளது. சில்வாவை விட லூயிஸ் சிறந்த டிஃபண்டர் என்ற பேச்சு அடிபடுகிறது.
இந்த கருத்து உண்மை என்பதை நிரூபிக்க அவர் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு நபர் தாமஸ் முல்லர். இந்த தொடரில் 4 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் முல்லரை லூயிஸ் கட்டுப்படுத்தி விட்டால் போதும். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. முன்களத்தில் புகுந்து விளையாடி வாய்ப்புகள் மிஸ் ஆகும்போது சன்னமாக நாக்கை வெளியே நீட்டி விரக்தியை வெளிப்படுத்தும் முல்லரை லூயிஸ் எப்படி சமாளிப்பார் என்பதில்தான் உள்ளது பிரேசிலின் கனவு.
லூயிஸ் கஸ்டவோ – டோனி க்ரூஸ்
சஸ்பெண்ட் காரணமாக காலிறுதியில் பிரேசில் வீரர் லூயிஸ் கஸ்டவோ பங்கேற்கவில்லை. அரையிறுதியில் களமிறங்குகிறார். நடுகள வீரரான இவருக்கும், இந்த தொடரில் துல்லியமாக பாஸ்களை வழங்குவதில் மன்னனாக விளங்கும் ஜெர்மனியின் டோனி க்ரூஸூக்கும்தான் பலப்பரீட்சை. ஃபெர்னாண்டினோவும், பாலினோவும் இணைந்து கொலம்பியாவின் ஜேம்ஸ் ராட்ரிகெஸைக் கட்டுப்படுத்தியதைப் போல ஜெர்மனியின் முன்கள வீரர்களை கஸ்டவோ கட்டுப்படுத்த வேண்டும்.