தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அஸ்வின் 200 விக்கட் மைல்கல்லை எட்ட 12 விக்கட் தேவை

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.   இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 16 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.ashwin

இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.   வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிங்ஸ்டன் சபீனா பார்க் ஆடுகளத்தில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மீண்டும் ஒரு முறை தனது மாயாஜாலத்தை காட்டி வியப்பூட்டியிருக்கிறார்.

அவர் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 34-வது டெஸ்டில் விளையாடும் அஸ்வின் ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 18-வது முறையாகும். இன்னும் 12 விக்கெட்டுகள் எடுத்தால் அவர் 200 விக்கெட் மைல்கல்லை எட்டிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில சாதனைகள் வருமாறு:-

 * கிங்ஸ்டன் மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றுவது 2006-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

* அஸ்வின், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆசியாவுக்கு வெளியே, ஒரு தொடரில் சுழற்பந்து வீச்சாளர் இரண்டு முறை 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் எடுப்பது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2006-ம் ஆண்டு இதே வெஸ்ட் இண்டீஸ் பயணத்தின் போது, இத்தகைய சிறப்பை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் பெற்றிருந்தார்.

* அஸ்வின் தொடர்ச்சியாக 4 டெஸ்டுகளில் (இரண்டு டெஸ்ட் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, இரண்டு டெஸ்ட் தற்போதைய வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ஏதாவது ஒரு இன்னிங்சில் ஐந்தோ அல்லது அதற்கு மேலோ விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த சாதனையை செய்த 3-வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆவார். ஏற்கனவே பி.சந்திரசேகர், அனில் கும்பிளே ஆகியோர் இச்சாதனையை செய்திருக்கிறார்கள். அதை அஸ்வின் சமன் செய்தார்.

 முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு அஸ்வின் நிருபர்களிடம் கூறுகையில், ‘எந்த ஒரு போட்டிக்கு சென்றாலும் எதிரணி பேட்ஸ்மேனை இதற்கு முன்பு நான் அவுட் ஆக்கி இருக்கிறேனா என்று ஆராய்வேன். அதன் பிறகு அவரின் பலம், பலவீனத்திற்கு ஏற்ப திட்டம் வகுப்பேன். சில சமயம் நமது யுக்திக்கு பலன் கிடைக்காது. ஆனால் கடந்த இரு இன்னிங்ஸ் எனக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது’ என்றார். “டாஸ் ஜெயித்து அவர்கள் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

டாஸ் போடும் போது இந்திய கேப்டன் விராட் கோலி குறிப்பிட்டதை போன்றே, ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்தது, பவுன்சும் காணப்பட்டது” என்றும் அஸ்வின் தெரிவித்தார்.

Comments
Loading...